தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-;
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
சரக்கு வாகனங்களால் அவதி
பொள்ளாச்சி கடைவீதியில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு காலை மற்றும் மாலை நேரத்தில் வாகனங்களில் பொருட்கள் கொண்டு வந்து இறக்கி வைக்கப்படுகிறது. இதனால் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.அபிநயசவுந்தர்யா, பொள்ளாச்சி.
ஒளிராத மின்விளக்கு
கோவை மாநகராட்சி 65-வது வார்டு சவுரிபாளையம் பிரிவு அய்யப்பன் கோவில் தெருவில் மின்விளக்குகள் உள்ளன. இதில் 2 விளக்குகள் கடந்த 6 மாதங்களாக ஒளிருவது இல்லை. இதனால் இங்கு இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஒளிராத இந்த தெருவிளக்குகளை ஒளிர செய்ய வேண்டும்.
பிரதீப், சவுரிபாளையம் பிரிவு.
சுற்றுச்சுவர் இல்லை
கோவை கவுண்டம்பாளையம் மேற்கு மண்டல அலுவலக பிரிவு எதிரே தரைமட்ட குடிநீர் தொட்டி உள்ளது. இங்கு சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரத்தில் இங்கு வரும் மர்ம ஆசாமிகள் மது அருந்திவிட்டு காலிபாட்டில்களை உடைத்து விட்டு செல்கிறார்கள். இதனால் அங்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகேசன், கவுண்டம்பாளையம்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே பெரியார் நகர் உள்ளது. இங்கு இருக்கும் சாக்கடை கால்வாயில் கழிவுகளை சரிவர சுத்தம் செய்வது இல்லை. இதனால் அங்கு சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகரித்து உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சாக்கடை கால்வாயை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
தர்மன், சிங்காநல்லூர்.
சுகாதார சீர்கேடு
கோவை முத்தண்ணன் குளக்கரையில் ஏராளமானோர் கழிவுப் பொருட்களை கொட்டிச்செல்கிறார்கள். இதனால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு தேங்கி கிடக்கும் கழிவுகளை அகற்றுவதுடன் அங்கு கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
முருகன், ஆர்.எஸ்.புரம்.
உடைந்த நிழற்குடை
கோவை தடாகம் ரோட்டில் வெங்கிட்டாபுரத்தில் உள்ள பஸ்நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மேற்கூரை தகரத்தால் ஆனது. தற்போது அது பழுதடைந்து உடைந்த நிலையில் இருப்பதால் எந்த நேரத்திலும் உடைந்து விழ வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும்.
சேகர், சாய்பாபாகாலனி.
மின்விளக்குகள் ஒளிருமா?
கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் ஏராளமான மின்விளக்குகள் போடப்பட்டு உள்ளது. அதில் சில விளக்குகள் ஒளிருவது இல்லை. இதனால் இரவில் அங்கு இருள் சூழ்ந்து காணப்படுவதால் மேம்பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஒளிராத விளக்குகளை சரிசெய்ய வேண்டும்.
குமார், கோவை.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
ஒளிராத விளக்கு சரிசெய்யப்பட்டது
கோவை ராமநாதபுரம் 80 அடி ரோடு சர்ச் ரோட்டில் உள்ள மின்விளக்கு சரியாக ஒளிராமல் இருந்தது. இதனால் இரவில் இருள் சூழ்ந்்து காணப்பட்டதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஒளிராத விளக்குகளை சரிசெய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
முருகேசன், ராமநாதபுரம்.
அடிக்கடி விபத்து
கிணத்துக்கடவு அருகே உள்ள சென்றாம்பாளையத்தில் இருந்து மலசர்பதி வழியாக தாமரைகுளம் வரும் வழியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயத்துடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ண குமார், தாமரைக்குளம்.
பழுதான சாலை
கோவை சத்தி ரோட்டில் இருந்து பாரதி நகர் வழியாக காந்திமாநகர் செல்லும் சாலையில், வ.உ.சி. நகர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரி முன்பு 4 ரோடு சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அங்கு அடிக்கடி விபத்தும் நடந்து வருகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
சந்தான மூர்த்தி, காந்திமாநகர்.