மாவோயிஸ்டு, நக்சலைட் நடமாட்டம் உள்ளதா வால்பாறை மலைப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படை கண்காணிப்பு

வால்பாறை மலைப்பகுதியில் மாவோயிஸ்டு, நக்சலைட் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.;

Update:2022-04-15 19:53 IST
வால்பாறை

வால்பாறை மலைப்பகுதியில் மாவோயிஸ்டு, நக்சலைட் நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்து சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மாவோயிஸ்டு, நக்சலைட் நடமாட்டம் 

வால்பாறை பகுதியில் உள்ள வனப்பகுதிகள் தமிழக- கேரள எல்லையை ஒட்டி இருப்பதால் மானாம்பள்ளி மற்றும் வால்பாறை  வனத்துறையினர் மாவோயிஸ்டு நடமாட்டம், நக்சலைட் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவோயிஸ்டு, நக்சலைட் நடமாட்டம் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரக்கூடிய தமிழக போலீசாரின் சிறப்பு இலக்கு அதிரடி படை போலீசார் வால்பாறை பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகள், மலைவாழ் மக்கள் வசிக்கும் மலைவாழ் கிராமங்களில் சிறப்பு ரோந்துப் பணி மற்றும் கண்காணிப்பு நடத்தி, தமிழக-கேரள வனஎல்லை பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். 

அந்நியர்களின் நடமாட்டம் 

அதன்படி வால்பாறைக்கு சிறப்பு இலக்கு அதிரடி படைபோலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் 15 பேர் கொண்ட போலீசார், மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினருடன் இணைந்து நீரார் அணை வனப் பகுதியை ஒட்டியுள்ள சிங்கோனா மலைவாழ் கிராமத்திலும், கணபதி ஆறு வனப்பகுதிகளிலும் ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 
மலைவாழ் கிராம மக்களிடம் அந்நியர்களின் நடமாட்டம் குறித்தும், புதிய நபர்கள் யாராவது உதவும் நோக்கில் வந்தார்களா, மலைவாழ் கிராம பகுதிகளுக்கு ஏதாவது தேவைகள் உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தனர்.

தகவல் தெரிவிக்க வேண்டும்

இதனையடுத்து தமிழக -கேரள எல்லை பகுதியான மளுக்கப்பாறை பகுதியில் உள்ள போலீசாரின் சோதனை சாவடி மற்றும் வனத்துறையின் சோதனை சாவடி பகுதிகளிலும் ஆய்வு நடத்தினர். தமிழக கேரள எல்லைப் பகுதியை சுற்றியுள்ள இடங்களில் வாழும் மக்களிடமும் மாவோயிஸ்டு, நக்சலைட் நடமாட்டம் குறித்து கேட்டறிந்தனர்.
கிராமத்தை சேராத புதிய நபர்கள் யார் வந்தாலும், பல்வேறு உதவிகள் செய்வதாக கூறினாலும் உடனடியாக போலீசாருக்கும் வனத்துறையினருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று மலைவாழ் மக்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள். 

மேலும் செய்திகள்