தொடர் மழையின் காரணமாக குட்டையாக மாறும் ஸ்கேட்டிங் மைதானம்
தொடர் மழையின் காரணமாக ஸ்கேட்டிங் மைதானம் குட்டையாக மாறியது. இதனால் பயிற்சி பெற முடியாமல் மாணவ-மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர்.;
பொள்ளாச்சி
தொடர் மழையின் காரணமாக ஸ்கேட்டிங் மைதானம் குட்டையாக மாறியது. இதனால் பயிற்சி பெற முடியாமல் மாணவ-மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
ஸ்கேட்டிங் மைதானம்
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சமத்தூர் ராம ஐய்யங்கார் நகராட்சி பள்ளி மைதானத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கும் பணி தொடங்கியது. எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் நகராட்சி நிதி மூலம் ரூ.80 லட்சம் செலவில் ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மைதானத்தில் தற்போது மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கலந்துகொள்ள மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த மைதானத்தில் வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஸ்கேட்டிங் மைதானம் குட்டையாக மாறி வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
மாணவ-மாணவிகள் பயிற்சி
பொள்ளாச்சியில் சின்தட்டிக் ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. கோவையில் இருப்பதை விட சர்வதேச தரத்தில் இருப்பதால் அங்கிருந்து மாணவ-மாணவிகள் பொள்ளாச்சிக்கு பயிற்சிக்கு வருகின்றனர். ஆனால் ஸ்கேட்டிங் மைதானத்தில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவது வழக்கமாகி விட்டது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கோடை மழையினால் மைதானம் குட்டையாக மாறி விட்டது.
மைதானத்தில் நடுவில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மாணவ-மாணவிகள் பயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த பருவமழையின் போது இதேபோன்று மழைநீர் தேங்கியது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அதன்பிறகு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மீண்டும் மழைநீர் தேங்குகிறது. எனவே அதிகாரிகள் மழைநீர் தேங்குவதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மைதானத்தில் மின விளக்கு குடிநீர் வசதி, கேலரி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.