விடுமுறை காரணமாக வால்பாறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ெதாடர் விடுமுறை காரணமாக வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.;
வால்பாறை
ெதாடர் விடுமுறை காரணமாக வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அவ்வப்போது கோடைமழை, வெப்ப சலனம் காரணமாகவும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் இதமான காலசூழ்நிலை நிலவுகிறது. மேலும் சமவெளிப் பகுதியில் கோடை காரணமாக கடுமையான வெயில் வாட்டி வரும் சூழ்நிலையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அருகில் உள்ள கேரள மாநிலத்தில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வால்பாறை பகுதிக்கு வந்திருந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. தற்போது தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.
செல்பி எடுத்து உற்சாகம்
வால்பாறை பகுதியில் குவித்த சுற்றுலா பயணிகள் சாலக்குடிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்கும் சென்று வருகின்றனர். அதேபோல் அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வால்பாறை பகுதிக்கும் வந்து செல்வதால் வால்பாறை பகுதியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. புனித வெள்ளி என்பதால் ஒரளவிற்கு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இவர்கள் கூழாங்கள் ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் தங்களுடைய செல்போனில் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்து உற்சாகம் அடைந்தனர். இதேபோல் சோலையாறு அணை பகுதியையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
பாதுகாப்பு
பிரான்ஸ் நாட்டில் இருந்து குடும்பத்துடன் வால்பாறை பகுதிக்கு வந்திருந்த சுற்றுலா பயணியும் வால்பாறை பகுதியை ரசித்து சென்றார். இவரிடம் வால்பாறை பகுதியை குறித்து கேட்ட போது அதிகமான சுற்றுலா தலங்கள் இல்லாத நிலையில் இயற்கையான சூழ்நிலை குவிந்து கிடக்கிறது. இதனை கெடுத்து விடாமல் பாதுகாத்தால் வால்பாறை பகுதி சிறப்பான இயற்கையாக இருக்கும் என்று கூறினார்.
வருகிற நாட்களில் கூடுதலான சுற்றுலா பயணிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் கூழாங்கல் ஆறு, நல்லமுடி பூஞ்சோலை காட்சிமுனை, வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் கூடுதலான போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று வால்பாறை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.