ஒரகடத்தில் தொழிற்சாலையில் திருட்டு வழக்கில் 7 பேர் கைது
ஒரகடத்தில் தொழிற்சாலையில் திருட்டு வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.;
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கார்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் கார் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஸ்டீல் உருளைகள் டன் கணக்கில் திருடப்பட்டுப்பதை கண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழிற்சாலை நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து ஒரகடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் தொழிற்சாலையில் திருட்டுபோன பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சத்திற்கு மேல் இருக்கும் என தொழிற்சாலை நிர்வாகம் போலீசாரிடம் தெரிவித்திருந்தது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த பரசுராமன் (வயது 40), சிவகுமார் (34), டில்லி குமார் (42) என்பதும் இவர்கள் 3 பேரும் டிரைவர்கள் என்பதும் தெரியவந்தது. ஒரகடம் அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்த எல்லப்பன் (43), காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த அஜித் (28), வாலாஜாபாத் நாயக்கன் குப்பம் பகுதியை சேர்ந்த குமரேசன் (49), ஒரகடம் அடுத்த போந்தூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் (38), இவர்கள் 4 பேரும் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் 7 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில் தொழிற்சாலைகளில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தொழிற்சாலையில் திருட்டு போன ஸ்டீல் உருளைகள் 125 டன் இருக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் ரூ.90 லட்சம் மதிப்பிலான 70 டன் பொருட்களை போலீசார் மீட்டனர். இவர்களிடமிருந்து 3 லாரிகள் கைப்பற்றப்பட்டது.