மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் மரத்தின் மீது கார் மோதி விபத்து; பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளாது. இதில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;

Update:2022-04-16 22:20 IST
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளாது. இதில் பள்ளி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவர்கள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காமராஜ் நகரை சேர்ந்தவர் அப்துல் ஹமீது (வயது 49). இவர் அண்ணா மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் முகமது ஆரிப் (16), தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை முகமது ஆரிப் நோன்பு வைத்து, தொழுகையை முடித்த பின்னர் தனது நண்பர்கள் முகமது தவுபீக் (16), ஹர்ஷத் (16), காலீத் (16) மற்றும் முகமது இர்பான் (18) ஆகியோருடன் கோத்தகிரி செல்ல முடிவு செய்தார்.

 இதில் முகமது ஆரிப், தவுபீக், ஹர்ஷத் ஆகிய 3 பேரும் ஒரே பள்ளியில் 11-ம் வகுப்பும், காலீத் மற்றொரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பும், முகமது ஆரிப் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டும் படித்து வந்தனர்.

மரத்தின் மீது கார் மோதல்

இதனைத்தொடர்ந்து அவர்கள் ஹர்சத்தின் தந்தையிடம் காரை வாங்கிக்கொண்டு கோத்தகிரிக்கு புறப்பட்டனர். காரை முகமது இர்பான் ஓட்டினார். அவர் ஆரம்பத்தில் இருந்தே காரை அதிவேகமாக ஓட்டிச்சென்றதாக தெரிகிறது. 

இந்த நிலையில் அவர்கள் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் சிறிது தூரம் சென்று விட்டு அவர்கள் மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு திரும்பி வந்தாக தெரிகிறது.

அப்போது கோத்தகிரி மலைப்பாதையில் வனக்கல்லூரி அருகே காலை 7.20 மணிக்கு கார் வந்து கொண்டிருந்த போது திடீரென கார் முகமது இர்பானின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் நின்ற மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி

இந்த விபத்தில் காரின் இடுபாடுகளில் சிக்கி முகமது தவுபிக், முகமது ஆரிப் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

 இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார், தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் உடனடியாக உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முகமது இர்பான், காலீத், ஹர்ஷத் ஆகிய 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசார் விசாரணை

இந்த செய்தி அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை கண்டு கதறி அழுதது காண்பேரை கண்கலங்க செய்தது. இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்