கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. மகன் உள்பட 3 பேரிடம் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி மகன் உள்பட 3 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.;

Update:2022-04-16 22:21 IST
கோவை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி மகன் உள்பட 3 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

காவலாளி கொலை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். 

மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு, சதீசன் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி சேலத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். 

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை குறித்து முழு விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

தனிப்படையினர் விசாரணை

சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜ் கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டியிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்து உள்ளார். இதையடுத்து ஆறுகுட்டியிடம் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ஆறுகுட்டியின் மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, ஆறுகுட்டியிடம் உதவியாளராக இருந்த நாராயணன் ஆகியோரிடம்  தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது, கனகராஜ் எத்தனை ஆண்டுகள் கோவையில் தங்கியிருந்தார், ஜெயலலிதா இறந்த பின்னர் அவரை யார், யாரெல்லாம் சந்தித்தனர் என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

மேலும் செய்திகள்