கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு கோட்டூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் கோட்டூர் அருகே சங்கம்பாளையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 50 கிலோ எடை கொண்ட 34 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் வண்ணாமடையை சேர்ந்த கிரிபிரகாஷ் (வயது 27) என்பது தெரியவந்தது.
மேலும் கேரளா அண்ணாமலை பகுதியை சேர்ந்த அலாவுதீன் என்பவருடன் சேர்ந்து அதிக லாபம் பெறுவதற்காக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கிரிபிரகாசை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 1,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள அலாவுதீனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.