பலத்த சூறைக்காற்றுக்கு தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன

சூறாவளி காற்று வீசியதால் நெகமம் பகுதியில் தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன.;

Update:2022-04-16 23:05 IST
பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் நெகமம் பகுதியில் தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன. பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் விழுந்த மரக்கிளையை சுற்றுலா பயணிகள் அகற்றினர். 
சூறாவளி காற்று

பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திடீரென்று பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பொள்ளாச்சி-வால்பாறை சாலை கரியாஞ்செட்டிபாளையத்தில் ரோட்டோரத்தில் மரத்தின் கிளை முறிந்து நடுரோட்டில் விழுந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்றன. 

ஆழியாறுக்கு வாகனத்தில் சுற்றுலா பயணிகள் வந்தனர். 
அவர்கள் நடுரோட்டில் மரக்கிளை முறிந்து கிடப்பதை பார்த்ததும் வாகனத்தில் இறங்கி வந்து மரக்கிளைகளை கைகளால் முறித்து அகற்றினர். மேலும் சிலர் கையில் கிடைத்த பொருட்களை எடுத்து மரக்கிளைகளை துண்டு, துண்டாக வெட்டி சாலையோரத்தில் போட்டனர். 

வேனில் சுற்றுலா வந்த இளைஞர்கள் போக்குவரத்து பாதிக்கப்படுவதை பார்த்து சாலையில் விழுந்த மரக்கிளைகளை அகற்றிய சுற்றுலா பயணிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
தென்னை மரங்கள்

கிணத்துக்கடவு சுற்றியுள்ள கிராமங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. நெகமம் அடுத்த வடசித்தூர் குரும்பபாளையத்தில் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விவசாயி மந்திராசலம் எனபவரது விளைநிலத்தில் 11 தென்னை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்தது. 

மேலும் வடசித்தூரை சேர்ந்த நடராசு என்பவரின் தோட்டத்தில் 2 தென்னை மரங்களும், மாரப்பன் என்பவர் தோட்டத்தில் 2 தென்னை மரங்களும் முறிந்து விழுந்தது. அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் இல்லை.

 இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை ஊழியர்கள் தென்னை மரங்கள் முறிந்து விழுந்த இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தென்னை மரங்களுக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்கினால் முறிந்து விழுந்த தென்னை மரங்களை தோண்டி அப்புறப்படுத்த உதவியாக இருக்கும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்