வால்பாறை கார்வர்மார்ஷ் சிலை பகுதியில் டெலஸ்கோப் இல்லம்
வால்பாறை கார்வர்மார்ஷ் சிலை பகுதியில் டெலஸ்கோப் இல்லம் அமைக்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்ப்பார்த்து உள்ளார்கள்.;
வால்பாறை
வால்பாறை கார்வர்மார்ஷ் சிலை பகுதியில் டெலஸ்கோப் இல்லம் அமைக்கப்படுமா? என்று சுற்றுலா பயணிகள் எதிர்ப்பார்த்து உள்ளார்கள்.
சுற்றுலா பயணிகள் வருகை
கோவை மாவட்டம் வால்பாறை சிறந்த சுற்றுலா தலமாக மாறிவிட்டது. கண்ணை கவரும் வகையில் இயற்கை சூழலுடன் அமைந்துள்ள அடர்ந்த வனப் பகுதிகள் என்று எங்கு பார்த்தாலும் இதமான காலசூழ்நிலை நிலவி வருகிறது. இதனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் 9-வது கொண்டைஊசி வளைவு பகுதியில் அமைந்துள்ள ஆழியாறு அணை காட்சிமுனை, அட்டகட்டி ஹார்ன்பிள் அப்பர்ஆழியாறு அணை காட்சிமுனை, கருமலை பாலாஜி கோவில், கருமலை வேளாங்கண்ணி மாதா திருத்தலம், வெள்ளமலைடனல் பகுதி, குளிக்கும் வசதி கொண்ட கூழாங்கல் ஆறு, நீரார் அணை, சோலையாறு அணை, நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனை என்று ஒருசில சுற்றுலா தலங்கள் மட்டுமே வால்பாறையில் உள்ளது.
கார்வர்மார்ஷ் சிலை
ஆனால் இந்த சுற்றுலா தலங்களில் நீண்ட நேரம் செலவு செய்து கண்டு கழிப்பதற்கோ, குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கோ, குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பதற்கோ உரிய சுற்றுலா தலங்கள் இல்லை. சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரும்படியாக பல்வேறு திட்டங்களை சுற்றுலா தலங்களில் கொண்டு வரவேண்டும் என்பது வால்பாறை பகுதி வியாபாரிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை சாலையில் ஆண்டு முழுவதும் பனிபடரும் இதமான காலசூழ்நிலையை கொண்ட கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ளது. வால்பாறை பகுதியில் தேயிலை தோட்டங்கள் உருவாக காரணமாக விளங்கும் தேயிலை தோட்டங்களின் தந்தை என்று அழைக்கப்படும் கார்வர்மார்ஷின் பழமையான சிலை ஒன்று அமைந்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளாக இந்த கார்வர்மார்ஷ் என்ற ஆங்கிலேயரின் சிலை இருந்தாலும் அதை யாரும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர்.
டெலஸ்கோப் இல்லம்
கடந்த ஆண்டு வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த கார்வர்மார்ஷ் சிலை அமைந்துள்ள இடத்தை தூய்மை செய்து சிலையை பாதுகாப்பதற்கும் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அமர்ந்து செல்லும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது இந்த கார்வர்மார்ஷ் சிலை பகுதியானது சுற்றுலா தலமாக மாறிவிட்டது.
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கே நின்று பார்த்தால் தெரியக்கூடிய சோலையாறு அணை, பரம்பிக்குளம் அணை, பறந்து விரிந்து காணப்படும் தேயிலை தோட்டங்களுடன் கூடிய பள்ளத்தாக்கு காட்சியை கண்டு ரசிக்க தொடங்கி விட்டனர். இந்த பகுதியில் கவர்க்கல் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிற்றுண்டி கடைகளை நடத்தி வருவதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் நின்று செல்கின்றனர்.
எனவே இந்த இடத்தை மேலும் அழகுப்படுத்தும் வகையில் டெலஸ்கோப் இல்லம் அமைத்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும்.
இதன்மூலம் வால்பாறை பகுதியில் உள்ள தொழில்கள் வளர்ச்சியடைவதோடு, பொருளாதாரம் முன்னேற்றம் அடையும். எனவே கோவை மாவட்ட தமிழக சுற்றுலா துறை அதிகாரிகள் நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.