மதுக்கரையில் மர்மம் விலகாத மனித எலும்புக்கூடு
மதுக்கரையில் மர்மம் விலகாத மனித எலும்புக்கூடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.;
வனத்தோடு முகம் பதித்த மலைப்பகுதி. இதனால் அந்த பகுதிக்குள் ஆட்கள் நடமாட்டம் என்பது குறைவுதான். இருப்பினும் மலைமீது தெரியும் அருள்பாலிக்கும் கோவில். இதனால் அந்த பகுதி மனதை மயக்கும் இடமாகவே இருக்கும்.
இளம் காதல் ஜோடிகள் அடிக்கடி அந்த பகுதியில் வட்டமடித்து வலம் வருவதுண்டு.மதிய வேளை தொடங்கி மாலை வேளை வரை அங்குள்ள மலையேற்ற படிக்கட்டுகள் இளம் ஜோடிகளின் வேடந்தாங்கலாக காணப்படும்.
திக்...திக்..திகிலுடன் காணப்படும். அந்த பகுதியில் தான், அந்த மனித எலும்புக்கூடு கிடந்தது. எரிந்த நிலையில் கிடந்தவர் ஆண் என்றும், சில தடயவியல் அறிவியல் முறையில் அது கொலை என்றும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரது காலில் ஷூ அணிந்து இருந்தது தெரியவந்தது.
இதனால் அவர் படித்தவராக இருக்கலாம். வசதி படைத்தவராகவும் இருக்கலாம் என்பது அவரைப்பற்றிய விசாரணையில் கிடைத்த உறுதிநிலை. இருந்தாலும் இறுதி நிலை என்பது அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது இன்னும் கேள்வியாகவே இருக்கிறது.
கொலையாளிகளின் சாமர்த்தியம்
பொதுவாக இருமாநில எல்லைப்பகுதிகளில் எங்கிருந்தோ கொலை செய்து மூட்டைகளில் உடலை கட்டி வீசுவது, கொலை செய்யப்பட்ட உடல்களை மாநில எல்லைப்பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளுக்கு கொண்டு சென்று யாருக்கும் தெரியாமல் சுடுகாட்டில் எரிப்பது போல் அடையாளம் தெரியாமல் ஆக்குவது என்பது கைதேர்ந்த கொலையாளின் கை வந்த கலை.
இதனை கூலிப்படையினர் கூலாக செய்வதில் வல்லவர்கள்.ஆகவே உடல்களை எரித்து அடையாளம் தெரியாமல் ஆக்குவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கம்.
தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் மதுக்கரை பகுதியில் இதுபோன்ற கொலை சம்பவங்கள் பல நடந்துள்ளன. இதுபோன்ற கொலை சம்பவங்கள் சம்பந்தப்பட்ட அந்த மாநில போலீசாரை துப்புத்துலங்காமல் திணறடிப்பதற்கும், குற்றவாளிகள் பிடிபடாமல் இருப்பதற்காகவும்தான் இந்த நடவடிக்கையை கையாள்கிறார்கள்.
இதன் அடிப்படையில்தான் இந்த கொலை சம்பவம் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்தது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி. சம்பவம் நடந்த இடம் மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் அருகே உள்ள வனப்பகுதி. தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் அந்த உடல் கருகிய நிலையில் எலும்புக்கூடாக கிடந்தது.
காணாமல் போனவர்களின் பட்டியல்
அந்த எரிக்கப்பட்ட உடல் அருகே ஒரு லைட்டர், ஷூ இருந்தது. அந்த பகுதியில் வந்து சென்றதற்கான ஒரு வாகனத்தின் டயர் அடையாளம் இருந்தது. அது கார், அல்லது ஜீப்பாக இருக்கலாம். மர்ம மனிதர்கள் ஏற்கனவே கொலை செய்துவிட்டு, உடலை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளனர். இறந்தவரின் கால் எலும்பை வைத்து 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆணாக இருக்கலாம் என போலீசார் யூகித்தனர்.
ஆனால் இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? கொலை செய்த குற்றவாளி யார்? என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. உடல் கிடந்த அன்று காரில் சிலர் வந்ததாக அந்த பகுதி சிறுவன் ஒருவன் கூறியுள்ளான். அது மட்டுமே போலீசாருக்கு கிடைத்த துப்பு.
அந்த கொலை நடந்த இடத்தில் வாகனத்தில் சென்றுவர ஒரு பாதை மட்டுமே இருக்கிறது. மற்றபடி ரெயில்பாதை மற்றும் வனப்பகுதி வழியாக மட்டுமே நடந்து செல்ல கூடிய இடம் அது.
மதுக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள் பலர் பல்வேறு தொழில் நிறுவனங்களில் தங்கி வேலை செய்து வருகிறார்கள். வடமாநில தொழிலாளி கொலை செய்யப்பட்டாரா? என்றும் சந்தேகம் எழுகிறது. இருப்பினும் கேரள மாநிலத்தை சேர்ந்தவரை கடத்தி வந்து கொலை செய்து இருக்கலாம் என்பதே கொலைக்கான தீவிர விசாரணையில் ஒரு கண்ணோட்டமாக உள்ளது.
இந்த வகையில் காணாமல் போனவர்களின் பட்டியலை வைத்து முறையாக விசாரணை நடத்தி இருந்தால் கொலை செய்யப்பட்டவர் யார்? என்று துப்புதுலங்கி இருக்கும்.மேலும் கருகிய உடல் தொடர்பான தகவலை கேரள மாநில போலீசாருக்கு அனுப்பி அங்குள்ள காணாமல் போனவர்கள் பட்டியலை வைத்து விசாரணை நடத்தி இருந்தாலும் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கும்.
இதன் அடிப்படையில் முதல்கட்ட விசாரணையை தொடர்ந்த போதும் முழு மூச்சு விசாரணை என்பது முழுமையாக இல்லாமல் போனது என்றே கூறலாம்.
இது தவிரகொலை நடந்த இடம் சமூக விரோதிகள் வந்து செல்லும் பகுதியாகவும், போதை பொருள் நடமாட்டம் உள்ள பகுதியாகவும் இருக்கிறது.
எனவே இந்த கொலை வழக்கை தீவிரமாக துப்புத்துலக்க வேண்டும் என்பதே அந்தபகுதி பொதுமக்கள் வேண்டுகோள்.
மர்மம் விலகாத மனித எலும்புக்கூடு
பொதுவாக இதுபோன்ற கொலை சம்பவங்கள் நடைபெறும்போது சம்பந்தப்பட்ட விசாரணை ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்படும்போது, இந்தவழக்கு கிடப்பில் கிடக்கும். மேலும் உயர் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரி வரும்போது, அப்போது நடைபெற்ற குற்ற சம்பவங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பது என்பது முக்கியமான விஷயம்.
இதனால் இதுபோன்ற கிடப்பில் கிடக்கும் வழக்குகள் கிணற்றில் போட்ட கல்லாக அப்படியே கிடக்கும். ஆனால் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டாலும், புதிதாக வரும் ஆய்வாளர்கள் பழைய வழக்குகளின் பட்டியலை எடுத்து விசாரித்து குற்றவாளிகளை கண்டறிந்தால்தான், இதுபோன்ற குற்றங்களில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியும்.
ஆனால் அந்த வேகமும், விவேகமும் புதிதாக வருகின்ற எல்லோருக்கும் இருப்பதில்லையே. சிலர்தான் இதுபோன்ற வழக்குகளை தோண்டி எடுப்பதில் குறியாக இருந்து, குறிப்பிட்ட நாட்களில் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவார்கள். ஆகவே இந்த வழக்கையும் தூசி தட்டக்கூடிய துடிப்பான அதிகாரி தேவை.
மேலும் இதுபோன்ற துப்புத்துலங்காத வழக்குகளால், பிடிபடாத குற்றவாளிகள் மேலும்,மேலும் குற்றங்களை செய்யும் நிலைஏற்படும். இந்த கொலை வழக்கு குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, இந்த வழக்கு முடிக்கப்படவில்லை.
கொலை குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தான் கூறுகின்றனர். ஆனால் அதற்கான அதி தீவிரம் என்பது இன்னும் இந்த வழக்கில் தேக்கநிலையில்தான் உள்ளது. அந்த அதி தீவிரத்தை சம்பந்தப்பட்ட போலீசார், அல்லது தனிப்படை போலீசார் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பது இந்த கொலையில் உள்ள பார்வையாக உள்ளது. எ
து எப்படியோ...மதுக்கரையில் மர்மம் விலகாத மனித எலும்புக்கூடு கொலையாக இந்த சம்பவம் பரபரப்பாக இன்றுவரை பேசப்படுகிறது. ஆகவே இந்த கொலையில் இரு மாநில காவல்களும் இணைந்து ஆவல் கொண்டு அதற்குரிய தூண்டிலை போட்டால்தான் துப்புதுலங்கும் என்பதும், எதிர்பார்ப்பாக உள்ளது.