வாலாங்குளத்தில் விரைவில் படகு சவாரி சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி
கோவை வாலாங்குளத்தில் விரைவில் படகு சவாரி தொடங்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.;
கோவை
கோவை வாலாங்குளத்தில் விரைவில் படகு சவாரி தொடங்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
புகைப்பட கண்காட்சி
கோவை விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கரகாட்டம், ஒயிலாட்டம் உள்பட தமிழக நாட்டுபுற கலைகளின் ஓவியங்கள், கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்த தகவல்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டு உள்ளது.
இதை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பயணிகளை கவரும்
கோவை விமான நிலையத்தில் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளின் புகைப்பட கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் வெளிப்பகுதிகளில் ஆழியாறு, மேகமலை, வால்பாறை, மருதமலை போன்ற புகைப்படங்களும், தனுஷ்கோடி கடற்கரை மற்றும் இளநீரை பிரபலப்படுத்தும் நோக்கில் புகைப்படங்கள் வைக்கப்பட்டு உள்ளது.
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இவை அமைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற புகைப்பட கண்காட்சி கோவை விமான நிலையத்தில்தான் முதல்முறையாக திறக்கப்பட்டு உள்ளது.
அடுத்தபடியாக சென்னை விமான நிலையத்தில் இதேபோன்று சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சி திறக்கப்படும்.
வாலாங்குளத்தில் படகு சவாரி
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். தற்போது தொற்று பரவல் குறைந்து உள்ளதால் பல இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் சென்று வருகிறார்கள்.
சுற்றுலாத்துறையை பொறுத்த வரை பயணிகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடத்தப்படும். கோவை மக்களை கவரும் வகையில் கோவை வாலாங்குளம் குளத்தில் விரைவில் படகு போக்குவரத்து தொடங்கும். கோவையில் உள்ள மற்ற குளங்களில் படகு சவாரி அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன், இயக்குனர் சந்தீப் நந்தூரி, கலெக்டர் சமீரன், விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிசெல்வன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.