போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு பணியிடை நீக்கம்

போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2022-04-17 22:21 GMT
திருச்சி:

போலி மதுபான ஆலை
திருச்சி மாவட்டம்  மணிகண்டம் அருகே நாகமங்கலம் யாகப்புடையான்பட்டியில் காட்டுப்பகுதியில் சிலர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து போலி மதுபான ஆலை நடத்தி வருவதாக மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்திய போலீசார், அங்கிருந்து 1,893 மதுபாட்டில்கள், 3 பேரல்களில் மதுபானம், பல்வேறு மதுபான நிறுவனங்களின் போலி லேபிள்கள், மதுபாட்டில் மூடிகள் மற்றும் மதுபானம் தயாரிக்க பயன்படும் பல்வேறு வகையான மூலப்பொருட்கள், 3 எந்திரங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும், ஒரு காரும், ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
2 பேர் பணியிடை நீக்கம்
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் 5 பேரை கைது செய்தனர். திருச்சியில் போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் இந்த சம்பவத்தில் சரியான முறையில் முன்கூட்டியே தகவல்களை சேகரிக்காமல் பணியில் அலட்சியமாக இருந்ததாக திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீராபாய், மணிகண்டம் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு சுரேஷ் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் செய்திகள்