அடையாள அட்டை கேட்டு கிராம மக்கள் மறியல்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிய அடையாள அட்டை கேட்டு கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-18 10:27 GMT
செம்பட்டி:

செம்பட்டி அருகே உள்ள பாளையங்கோட்டை ஊராட்சியில் வசிக்கிற கிராம மக்கள், வீட்டு வரி செலுத்தினால் மட்டுமே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிய அனுமதி அளிக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகம் அறிவித்தது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை கேட்டு, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம மக்கள் நேற்று காலை காத்திருந்தனர். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சணாமூர்த்தி (வட்டார ஊராட்சி), ஏழுமலை (கிராம ஊராட்சி), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் அங்கு விரைந்தனர். இதற்கிடையே பஸ் சிறைபிடித்ததை கைவிட்டு, ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கிராம மக்களிடம், செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அதன்பிறகு கிராம மக்களுக்கு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. 

மேலும் செய்திகள்