ஸ்ரீபெரும்புதூர் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் பிணம்; கொலையா? போலீசார் விசாரணை
தூக்கில் தொங்கிய ஆண் பிணம் உடலில் ரத்த காயங்கள் இருப்பதால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.;
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பால் நெல்லூர் ஊராட்சியில், செலையனூர் செல்லும் சாலை ஜங்ஷனில் உள்ள காட்டுப்பகுதியில் வேப்பமரத்தில் ஒரு வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக தொங்கியவருக்கு 25 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது உடனடியாக தெரியவில்லை. மேலும், இறந்த நபர் வடமாநில வாலிபர் என்றும், அவரது கழுத்தில் மூன்று கயிறுகளால் இறுக்கி கட்டப்பட்டு உள்ளதாலும், உடலில் ரத்த காயங்கள் இருப்பதால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.