கருமத்தம்பட்டி
கோவை கருமத்தம்பட்டியை அடுத்த சோமனூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையிலான போலீசார் சோமனூர் சுற்றுவட்டார பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சோமனூரை அடுத்த நொய்யல் ஆற்றங்கறை பகுதியில் ரோந்தின் போது போலீசாரை பார்த்ததும் 3 பேர் தப்பி ஓடினர். இதனால் சந்தேகத்தின் பேரில் அவர்களை துரத்தி சென்றனர். இதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முருகசாமி (வயது 33) என்பதும், அங்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
தொடர்ந்து முருகசாமியிடம் நடத்தி விசாரணையில், அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்த விற்பனைக்காக அந்த பகுதியில் 26 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் முருகசாமியை கைது செய்தனர். மேலும் தப்பியோடி 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் வேறுயாருக்கும் தொடர்பு இருக்கிறதா? எங்கு இருந்து கஞ்சா கொண்டு வரப்பட்டது என்பது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.