கோவை அருகே பழமையான 3 நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது
கோவை அருகே பழமையான 3 நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது;
கோவை
கோவை அருகே பழமையான 3 நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.
3 நடுகல்கள் கண்டுபிடிப்பு
கோவை மாவட்டம் அன்னூரில் மன்னீஸ்வரர் கோவில் உள்ளது. அதன் அருகே பழமையான நடுகல்கள் இருப்பதாக திருப்பூரில் இயங்கும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ஆய்வு மைய இயக்குனர் தொல்லியல் ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் பொன்னுச்சாமி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மன்னீஸ்வரர் கோவிலின் அருகே உள்ள குளக்கரை மற்றும் 3 சாலை சந்திப்பு பகுதியில் சாலையோரம் பாதி புதைந்த நிலையில் பழமையான 3 நடுகல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது
பண்டைய காலத்தில் நாட்டை காப்பாற்றி வீரமரணம் அடைந்த வர்களுக்கு நடுகல் வைத்து வழிபடும் மரபு இருந்து உள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் அருகே குளக்கரையில் 2 நடுகல்களும், 3 சாலை சந்திப்பில் ஒரு நடுகல்லும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை மீட்கப்பட்டு தருமராச கோவிலில் வைக்கப்பட்டது.
தலைப்பலி
எதிரி படையுடன் போர் தொடங்குவதற்கு முன்பு போர்க்கடவுளான கொற்றவை முன்பு சென்று எம் மண்ணுக்கும், மன்னர்க்கும் துயரம் ஒழித்து வெற்றிகள் தருக என வீரர்கள் வேண்டி கொள்வார்கள்.
வெற்றி கிடைத்த பின்பு தம் தலையை பலியாக கொடுப்பார்கள். இது தலைப்பலி அல்லது நவகண்ட சிற்பங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அன்னூரில் கிடைத்த முதல் நடுகல் 90 செ.மீ உயரம், 40 செ.மீ அகலம் கொண்டது.
இந்த தலைப்பலி வீரகல்லில் மாவீரன் தன் இரு கைகளிலும் உள்ள கத்தியால் தன் தலையை தானே வீழ்த்தும் வகையில் சிற்பம் வடிக்கப்பட்டு உள்ளது.
மற்றொரு நடுகல் 80 செ.மீ. உயரம், 40 செ.மீ. அகலம் கொண்டது. இதில் ஒரு வீரன் தோள்வரை தொங்கும் காது, கழுத்தில் அணிகலன்கள், இடது கையில் வில், வலது கையில் அம்பு பிடித்து போருக்கு தயாராக உள்ளான்.
அவனின் குடுமி இடது பக்கம் சாய்ந்து அழகிய வேலைப்பாடுகளுடன் செதுக்கப் பட்டு உள்ளது. மேலும் இடுப்பில் குறுவாளுடன் காணப்படும் இந்த நடுகல் தமிழக நடுகல் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இருவீரர் நடுகல்
மற்றொன்று கொங்கு மண்டலத்தில் அரிதாக காணப்படும் இருவீரர் நடுகல் வகையை சேர்ந்தது.
இது 95 செ.மீ. உயரம், 45 செ.மீ. அகலம் கொண்டது. இதில் வீரன் ஒருவன் இடையில் வரிந்து கட்டிய ஆடை, பின்பக்கம் முடிந்த குடுமி, இடுப்பில் குறுவாள், இடது கையில் வில் பிடித்தபடி, தனது வலது கையில் உள்ள வாளால் எதிரி வீரனின் வலது பக்கம் குத்தும் வகையில் சிற்பம் வடிக்கப்பட்டு உள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான எதிரி வீரனும் தன் இரு கைகளிலும் அம்பு பிடித்தபடி உள்ளார். இந்த சிற்பம் கொங்கு மண்டல மக்களின் வாழ்வியலை எடுத்துக் காட்டும் வகையில் உள்ளது.
இந்த 3 நடுகல்லும் எப்போது வடிவமைக்கப்பட்டது என்பது போன்ற எழுத்து பொறிப்புகள் இல்லை.
ஆனாலும் அவற்றின் அமைப்பை வைத்து பார்க்கும் போது கி.பி.12-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.