தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-;

Update:2022-04-19 20:43 IST

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 

காட்டு பன்றிகள் தொல்லை

கோத்தகிரி தாசில்தார் அலுவலக சாலை போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நெரிசல் மிகுந்த பகுதியாகும். இந்த சாலையில் காட்டுப்பன்றிகள் தொடர்ந்து உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். அத்துடன் அவர்கள் அந்த வழியாக நடந்து செல்லும்போது பயத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து ஊருக்குள் வந்து தொல்லை கொடுக்கும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும். 
சம்சுதீன், கோத்தகிரி.

பழுதான நூலகம்

பந்தலூர் அருகே சேரங்கோட்டில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்துக்கு சேரங்கோடு, படச்சேரி, சிங்கோனா உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் உள்பட பலர் சென்று புத்தகங்களை வாசத்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த நூலக கட்டிடம் பழுதான நிலையில் இருப்பதால் அங்கு செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. அத்துடன் மழை பெய்தால் மழைநீர் உள்ளே வந்து விடுகிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தேவதாஸ், படச்சேரி.

எச்சரிக்கை பலகை தேவை 

சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜல்லிபட்டி, செஞ்சேரிமலை பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் பலர் ஆழம் தெரியாமல் இறங்கி குளிக்கின்றனர். அப்போது தண்ணீர் வேகத்தில் அடித்து செல்தல், ஆழமான பகுதியில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழத்தல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு ஆழம் குறித்த எச்சரிக்கை பலகை வைத்தால் அங்கு குளிப்பவர்கள் எச்சரிக்கையுடன் குளிப்பார்கள்.  அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேஷ், சுல்தான்பேட்டை.

வீணாகும் குடிநீர் 

கோவை புலியகுளத்தில் இருந்து சவுரிபாளையம் செல்லும் மெயின் ரோட்டில் உடையாம்பாளையம் அருகே, ரோட்டில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் அந்தப்பகுதியில் குடிநீர் ஆறுபோன்று சாலையில் ஓடி வருகிறது. தற்போது பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில் இங்கு குடிநீர் வீணாக செல்வதால் மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும். 
கந்தசாமி, சவுரிபாளையம். 

பஸ் வசதி வேண்டும்

அன்னூரில் இருந்து தினமும் ஏராளமானோர் பல்லடம் சென்று வருகிறார்கள். ஆனால் இங்கிருந்து பல்லடத்துக்கு போதிய பஸ்வசதி இல்லை. இதன் காரணமாக இந்த பகுதியை சேர்ந்தவர்கள் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் அன்னூரில் இருந்து கருமத்தம்பட்டி, வழியாக பல்லடத்துக்கு பஸ்கள் இயக்கினால் நன்றாக இருக்கும். அதை அதிகாரிகள் செய்ய வேண்டும். 
ராஜேந்திரன், அன்னூர். 

சாக்கடை கால்வாய்

கோவை-சத்தி சாலையில்  எஸ்.ஆர்.பி. மில் பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையை அகலப்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதற்கிடையே இங்கு சாலை ஓரத்தில் சாக்கடை கால்வாய் உள்ளதால் இந்த பகுதியில் சாலை வளைவுடன் அமைக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு அமைக்கும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால், சாக்கடை கால்வாயை மாற்றி, சாலையை நேராக அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். 
ஆறுமுகம், எஸ்.ஆர்.பி.மில். 

நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள்

கோவை காந்திபுரத்தில் இருந்து கோவைப்புதூர் வழித்தடத்தில் காந்திபுரம்-பேரூர் வழியில் 160 சி என்ற 2 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்கள் திடீரென்று நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த பகுதியை சே்ாந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை உடனடியாக இயக்க முன்வர வேண்டும்.
சுரேஷ், கோவைப்புதூர். 

அடிக்கடி மின்தடை

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து சூளேஸ்வரன்பட்டி பகுதிக்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டும்.
மஜீத், சூளேஸ்வரன்பட்டி. 

தெருவிளக்குகள் இல்லை

கோவை கள்ளபாளையம் அருகே உள்ள சின்னக்குயிலி பிரிவில் ஆர்.கே.நகர் உள்ளது. இந்த பகுதிக்கு சின்னக்குயிலி பிரிவில் இருந்து 300 மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். ஆனால் இங்கு தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் பலர் வேலை முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பும்போது, அச்சத்துடன் இந்த பகுதியில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இங்கு தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
செல்வி, ஆர்.கே.நகர். 



மேலும் செய்திகள்