2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மின்விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்த மாமல்லபுரம் புராதன சின்னங்கள்
2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மின்விளக்கு வெளிச்சத்தில் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் ஜொலித்தன. இதனை சுற்றுலா பயணிகள் மகிழச்சியுடன் கண்டுகளித்து விட்டு சென்றனர்.;
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்கள் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னமாக விளங்குகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக மாமல்லபுரம் புராதன சின்னங்கள் மின் விளக்கு வெளிச்சத்தில் கண்டுகளிக்க தடைவிதிக்கப்பட்டு, இரவு நேர பார்வையாளர் அனுமதியும் ரத்து செய்யப்பட்டிருந்தது.
பகல் நேரத்தில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் உலக பாரம்பரிய தினத்தையொட்டி சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு பிறகும் பார்வையாளர் நேரத்தை கடந்தும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
அப்போது கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட புராதன சின்னங்களை 8 மணி வரை ஜொலிக்கும் மின் விளக்கு வெளிச்சத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்துவிட்டு சென்றனர்.
குறிப்பாக கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக மின் விளக்கு வெளிச்சத்தில் பார்வையிட தடை விதிக்கப்பட்ட நிலையில் அனைத்து புராதன சின்னங்களிலும் பழைய மின் விளக்குகள் அகற்றப்பட்டு, நவீன தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அதிக ஒளி பார்ச்சும் வகையில் பொருத்தப்பட்ட மின் விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கும் சிற்பங்களை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.