தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-;
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
ஆபத்தான தொட்டி
கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதி சாலையோரத்தில், குடியிருப்புகளுக்கு குடிநீர் திறப்பதற்கான வால்வு அமைந்து உள்ளது. இந்த வால்வுக்காக கட்டப்பட்டு உள்ள தொட்டி சாியாக மூடப்படாமல் உள்ளது. அத்துடன் இது சாலை ஓரத்தில் இருப்பதால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அதற்குள் தவறி விழ வாய்ப்பு உள்ளது. அத்துடன் நடந்து செல்பவர்களும் அதற்குள் விழுந்து காயத்துடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் ஆபத்தான அந்த தொட்டியை சரியாக மூட வேண்டும்.
கிருஷ்ணமூர்த்தி, கோத்தகிரி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
பொள்ளாச்சி- உடுமலை மெயின் ரோட்டில் கோமங்கலத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி வெளிப்புற சுற்றுசுவரை ஒட்டி குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அவை சுத்தம் செய்யப்படாமல் குவிந்து இருப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
கோபி, பொள்ளாச்சி.
பராமரிப்பு இல்லாத கழிவறை
கோவை மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட பீளமேட்டில் மேம்பாலம் அருகே கழிவறை உள்ளது. இந்த கழிவறை சரியாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் தண்ணீரும் சரியாக வருவது கிடையாது என்பதால் இந்த கழிவறையை பயன்படுத்தும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். வீட்டில் கழிவறை இல்லாதவர்களுக்கு இந்த கழிவறைதான் உபயோகமாக இருக்கிறது. ஏராளமானோர் பயன்படுத்தி வரும் இந்த கழிவறையை முறையாக சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தன்ராஜ், பீளமேடு.
குண்டும் குழியுமான சாலை
கோவையை அடுத்த கணுவாய் சாலையில் வெங்கிடாபுரம் முதல் டி.வி.எஸ்.நகர் வரை சாலை மிகவும் படுமோசமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை குண்டும்-குழியுமாக இருப்பதால் இந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். தற்போது மழை பெய்வதால் அங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் குழி இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அதில் சிக்கி கீழே விழுந்து காயங்களுடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
அருண்குமார், கணுவாய்.
பஸ் இயக்கப்படுமா?
கோவையை அடுத்த கோவில்பாளையம் பகுதியில் இருந்து அவினாசி வரை ஏ-10 என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. தற்போது இந்த பஸ் இயக்கப்படுவது இல்லை. இதனால் மாணிக்கம்பாளையம், அருகம்பாளையம், பொன்னேகவுண்டன்புதூர், செட்டிபுதூர் பகுதியை சேர்ந்த மாணவர்கள் கோவில்பாளையம் பள்ளிக்கு வர முடியாமல் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே இந்த பஸ்சை மீண்டும் இயக்கினால் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல உதவியாக இருக்கும். எனவே அதற்கு அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.
பிரகாஷ், கோவில்பாளையம்.
தண்ணீர் இல்லை
கோவையை அடுத்த கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சேடபாளையம் வீரமாத்தி நகரில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை அந்த கழிப்பிடத்துக்கு தண்ணீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் அந்த கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக இந்த பகுதியை சேர்ந்த பலர் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இந்த கழிவறைக்கு தண்ணீர் வசதி செய்ய வேண்டும்.
மணி, சேடபாளையம்.
நீட்டிப்பு செய்ய வேண்டும்
கோவை அருகே உள்ள அரசூர், முதலிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் சூலூர் மற்றும் பிற பகுதிகளுக்கு செல்ல சூலூர் பிரிவு செல்ல வேண்டும். ஆனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சூலூர் பிரிவு வரை மினிபஸ்கள் இயக்கப்படுகிறது. அந்த பஸ்களை அரசூர் வரை நீட்டிப்பு செய்தால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும். அதை அதிகாரிகள் செய்ய வேண்டும்.
சுதிஷ், கோவை.
குப்பைகளால் அவதி
கோவை டாடாபாத் ராதாகிருஷ்ணன் சாலையில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. அவை சுத்தம் செய்யப்படாததால் சாலையோரத்தில் குப்பைகள் மலைபோன்று ேதங்கி கிடக்கின்றன. காற்று வீசும்போது அவை பறந்து வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுகிறது. அத்துடன் குப்பைகள் கடும் துர்நாற்றம் வீசுவதால் இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குவிந்து கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
சண்முகசுந்தரம், டாடாபாத்.
ஒளிராத மின்விளக்குகள்
கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் ஏராளமான மின்விளக்குகள் போடப்பட்டு உள்ளது. அதில் ஏராளமான விளக்குகள் ஒளிருவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் அங்கு இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் இரவில் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஒளிராத விளக்குகளை சரிசெய்து ஒளிர அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செல்வின், காந்திபுரம்.