அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்;

Update:2022-04-20 23:07 IST
பொள்ளாச்சி

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சாலை பணியாளர்கள் பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும், கொரோனா காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிபந்தனையின்றி கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி தாசில்தார் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் வட்ட கிளை தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி வட்ட கிளை செயலாளர் சின்னமாரிமுத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

இதில் சாலை பணியாளர்கள் சங்க கோட்ட தலைவர் மணிகண்டன், சத்துணவு ஊழியர்கள் சங்க வட்ட கிளை தலைவர் ஜோதிமணி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க வட்ட கிளை தலைவர் சுப்பிரமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதேபோன்று வால்பாறை தாசில்தார் அலுவலகம், கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகம் ஆகிய இடங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத்தலைவர் ஜெகநாதன், வால்பாறை வட்டக்கிளை தலைவர் பன்னீர்செல்வம், கிணத்துக்கடவு வட்டக்கிளை துணைத்தலைவர் வீரமுத்து, சி.ஐ.டி.யு. ஒருங்கிணைப்பாளர் மருதாசலம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்