கட்டிடத்தில் வளர்ந்த மரம்
பொள்ளாச்சி மார்க்கெட் கட்டிடத்தில் மரம் வளர்ந்து உள்ளது.விபத்து ஏற்படும்முன் அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.;
பொள்ளாச்சி
பொள்ளாச்சி மார்க்கெட் கட்டிடத்தில் மரம் வளர்ந்து உள்ளது.விபத்து ஏற்படும்முன் அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
நகராட்சி மார்க்கெட்
பொள்ளாச்சி தேர்நிலை திடலில் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் உள்ளது. இங்கு காய்கறி கடைகள், மளிகை கடைகள், வாழை இலை கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டில் கடைகளுக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு, பல ஆண்டுகள் ஆகி விட்டது. தற்போது அந்த கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
இதற்கிடையில் சத்திரம் வீதியில் இருந்து கந்தசாமி பூங்கா செல்லும் வழியில் ஒரு கட்டிடத்தின் மீது ஆலமரம் முளைத்து பெரிதாக வளர்ந்து நிற்கிறது. இதனால் கட்டிடம் பலவீனம் அடைந்து, மரத்தின் தயவோடு நின்று கொண்டு இருக்கிறது. மரத்தோடு கட்டிடம் சேர்ந்து விழுந்தால் நிச்சயம் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேற்கூரை பெயர்ந்து...
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பொள்ளாச்சி நகராட்சி தேர்நிலை திடல் மார்க்கெட்டில் கடைகளுக்கு கட்டிடம் கட்டி 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதற்கு பிறகு கட்டிய காந்தி மார்க்கெட்டில் பழைய கடைகளை இடித்து விட்டு புதிதாக கடைகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆனால் தேர்நிலை திடல் மார்க்கெட்டில் மட்டும் புதிதாக கடைகள் கட்டவில்லை. பழைய கட்டிடங்களில் இருந்து அடிக்கடி கான்கீரிட் மேற்கூரை மட்டும் பெயர்ந்து விழுகின்றன.
இதற்கிடையில் ஒரு கட்டிடத்தின் மீது பெரிய ஆலமரம் வளர்ந்து நிற்கிறது. காற்று தாக்குப்பிடிக்காமல் மரம் விழுந்தால் கட்டிடமும் சேர்ந்து விழுந்து விடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அந்த பகுதியில் காலை முதல் இரவு வரை எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். இதனால் கட்டித்தோடு சேர்ந்து மரம் விழும்போது பெரும் சேதம் ஏற்பட கூடும்.
புதிய கடைகள்
இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும்முன் கட்டிடத்தையும், மரத்தையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மார்க்கெட்டில் உள்ள பழைய கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு புதிதாக கடைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கையில் பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள தேர்நிலை மார்க்கெட்டில் ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் புதிதாக கடைகள் கட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. நிதி ஒதுக்கீடு செய்ததும், டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும். இதற்கிடையில் ஆபத்தான நிலையில் கட்டிடத்தின் மீது உள்ள மரத்தை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனர்.