சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் பறிமுதல்
விபத்தில் வாலிபர் மூளைச்சாவு அடைந்ததன் எதிரொலியாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்படும் என்று வால்பாறை நகராட்சி தலைவர் அறிவித்தார்.;
வால்பாறை
விபத்தில் வாலிபர் மூளைச்சாவு அடைந்ததன் எதிரொலியாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்படும் என்று வால்பாறை நகராட்சி தலைவர் அறிவித்தார்.
அவசர ஆலோசனை கூட்டம்
வால்பாறையில் தாய்முடி எஸ்டேட் பகுதியை சேர்ந்த ஹரிகரன்(வயது 23) என்பவர் ஸ்டேன்மோர் எஸ்டேட் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது மாடு மீது மோதி மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக வால்பாறை பகுதியில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கான அவசர ஆலோசனை கூட்டம், நகராட்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செந்தில்குமார், ஆணையாளர் சுரேஷ்குமார், தாசில்தார் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பேசிய நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி கூறும்போது, வால்பாறை நகரில் இனிமேல் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கோவையில் உள்ள கோசாலைக்கு தானமாக வழங்கப்படும். எனவே கால்நடைகளை கொட்டகைகளில் அடைத்து வளர்க்க வேண்டும். உரிமையாளர்கள் தங்கள் பொறுப்பில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு மீண்டும் கொட்டகைகளில் அடைத்து வைத்து வளர்க்க வேண்டும் என்றார்.
குப்பை கிடங்கு மாற்றம்
இதையடுத்து ஆணையாளர் சுரேஷ்குமார் பேசும்போது, கால்நடைகளை சாலைகளில் சுற்றித்திரிய விடக்கூடாது என்று பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இனிமேல் நகராட்சி நிர்வாகம் எந்தவித கருணையும் காட்டாது. கால்நடைகளை பறிமுதல் செய்தால், அதன் உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படமாட்டாது.
இந்த பணியை மேற்கொள்ள நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் தனி வாகனத்துடன் சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நகராட்சி குப்பை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
கள ஆய்வு
பின்னர் தாசில்தார் குமார் கூறுகையில், வால்பாறையில் மின் மயானம் அமைக்க இடம் தேர்வு செய்து, கலெக்டரின் அனுமதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பிற திட்டங்களை செயல்படுத்த இடவசதி இல்லை. இதனால் தனியார் எஸ்டேட் நிர்வாகங்களிடம் இருந்து கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்பின்னர் கால்நடைகளை அடைக்க, நகராட்சி குப்பை கிடங்கை மாற்ற இடம் ஒதுக்க முடியும். அதுவரை கால்நடை உரிமையாளர்கள் நகராட்சியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றார்.
இது தவிர வால்பாறையில் பி.ஏ.பி. காலனியில் இருந்து தீயணைப்பு நிலையம் வரை சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இது தொடர்பாக கள ஆய்வு நடத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் கால்நடைகளை சாலையில் சுற்றித்திரியவிடமாட்டோம் என்று உரிமையாளர்கள் உறுதி அளித்தனர். கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள், கால்நடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.