பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.;

Update:2022-04-20 23:09 IST
பொள்ளாச்சி

போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பத்ரகாளியம்மன் கோவில்

பொள்ளாச்சியை அடுத்த போடிபாளையம் குளத்தூரில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 4-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து பூவோடு எடுத்து வருதல், அன்னதானம், ஆஞ்சநேயர் கோவில் தீர்த்தம் கொண்டு வருதல், புலி வேடம் அணிந்து ஆட்டுகிடா எடுத்தல், மீன்குளத்தி பகவதியம்மன், குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தல் ஆகியன நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று நடைபெற்றது.

குண்டம் இறங்கினர்

இதையொட்டி நேற்று மாலை 6 மணிக்கு பூக்குண்டம் திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து சிங்க வாகனத்தில் அம்மன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, குண்டம் வளர்க்கப்பட்டது. இன்று காலை 7 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்குதல் தொடங்கியது. முதலில் மல்லிகை பூவை குண்டத்தில் உருட்டி விட்டனர். அதன்பிறகு பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள். இதில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 இதையடுத்து காலை 9 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை(வியாழக்கிழமை) இரட்டைக்கிடா வெட்டி சக்தி கும்பம் எடுத்தல் நிகழ்ச்சியும், நாளை (வெள்ளிக்கிழமை) மகா அபிஷேக ஆராதனையும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. இதையொட்டி போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்