மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் - கலெக்டர் தொடங்கிவைத்தார்

காஞ்சீபுரம் பேரறிஞர் அண்ணா விளையாட்டரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.;

Update:2022-04-21 18:22 IST
காஞ்சீபுரம், 

மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் பொருட்டு காஞ்சீபுரம் பிரிவு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2021-2022-ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு் போட்டிகளை காஞ்சீபுரம் பேரறிஞர் அண்ணா விளையாட்டரங்கத்தில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.

இதில் கை, கால் ஊனமுற்றவர்களுக்கு 50 மீ, 100 மீ, 500 மீ ஓட்டம், குண்டு எறிதல், சக்கரநாற்காலி பந்தயம், பார்வையற்றோர்களுக்கு 50 மீ, 100 மீ ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், பூப்பந்து எறிதல், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு 50 மீ, 100 மீ ஓட்டம், மென் பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், காது கேளாதோருக்கு 100 மீ, 200 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீ ஓட்டம் ஆகிய தடகள போட்டிகள் நடைபெற்றன.

மேலும் கை, கால் ஊனமுற்றவர்களுக்கு இறகு பந்து (ஒற்றையர் மற்றும் இரட்டையர்) ஒரு குழுவில் 5 நபர்கள், மேஜை பந்து (ஒரு குழுவில் 2 நபர்கள்), பார்வையற்றோர்களுக்கு கையுந்து பந்து (ஒரு குழுவில் 7 நபர்கள்), மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எறிபந்து (ஒரு குழுவில் 7 நபர்கள்), காது கேளாதோருக்கு கபடி (ஒரு குழுவில் 7 நபர்கள்) ) என குழுப்போட்டிகளும் நடத்தப்பட்டன.

இந்த போட்டிகளில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டார்கள். இதில் முதல் இடம் பிடிப்பவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

இநத நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்