கோவை
நாமக்கல் மாவட்டம் சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் அஜய் (வயது 21). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படித்துக்கொண்டு கல்லூரி விடுதியில் தங்கியிருந்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர் விஷால் என்பவருடன் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பயிற்சிக்காக சென்றார்.
பின்னர் பயிற்சியை முடித்துக்கொண்டு இரவு நண்பர் விஷாலுடன் விடுதிக்கு செல்ல மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது கோவை அவினாசி ரோடு அரசு மருத்துவக்கல்லூரி சிக்னல் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில்,மோட்டார் சைக்கிளில் சென்ற அஜய் மற்றும் விஷால் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் அஜய் பலத்த காயமடைந்தார். விஷால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அஜய்யை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், விபத்தை ஏற்படுத்திய கோவை வேலாண்டி பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் (54) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.