கூடுவாஞ்சேரி அருகே ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் கைது
கூடுவாஞ்சேரி அருகே ரேஷன் அரிசியை கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.;
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் முதல் குறுக்குத்தெருவில் உள்ள ஒரு வீட்டில், ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடியுரிமை பாதுகாப்பு வட்ட வழங்கல் அதிகாரி சசிகலாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் குடியுரிமை வட்ட வழங்கல் அலுவலர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழுவினர், சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடியாக சோதனை செய்தபோது ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த வீட்டில் இருந்து தப்பி ஓட முயன்ற கூடுவாஞ்சேரியை சேர்ந்த சுரேஷ் (வயது 36), சாகுல் அமீது (27), ஜாகீர் உசேன் (31), மணிகண்டன் (28), பிரபாகரன் (28), விஜயகுமார் (63) ஆகியோரை போலீசார் கைது செய்து கூடுவாஞ்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்த 20 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை காஞ்சீபுரத்தில் உள்ள குடோனுக்கு லாரிகள் மூலம் எடுத்துச்சென்றனர்.