தனியார் நிறுவன உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி கமிஷனர் அலுவலகம் முற்றுகை
வீட்டு உரிமையாளர்களிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி கமிஷனர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.;
சோழிங்கநல்லூர்,
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த பொத்தேரி பகுதியில் அறிவுநம்பி என்பவர் தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் மாதந்தோறும் வீட்டுக்கு வாடகை தருவதாக கூறி அந்த பகுதிகளில் வீட்டின் உரிமையாளர்களிடம் ஒரு ஒப்பத்தம் போட்டுள்ளார். அதன் பிறகு அந்த வீடு தேடும் நபர்களுக்கு லீசுக்கு விடுவதாக கூறி அவர்களிடம் ரூ.3 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பெற்று வீட்டை லீசுக்கு விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக வீட்டின் உரிமையாளர்களுக்கு வாடகை தரவில்லை என்பதால் உரிமையாளர்கள் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் வசிப்பவர்களை உடனடியாக காலிசெய்ய கூறியுள்ளனர். அதற்கு வீட்டில் வசிப்பவர்கள் நாங்கள் லட்சக்கணக்கில் முன் பணம் செலுத்தி வீட்டை லீசுக்கு எடுத்துள்ளதாக கூறியுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்ற ஒரு கட்டத்தில் இருவரும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.
ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து வீட்டை வாடகைக்கு எடுப்பதுபோல் உரிமையாளரிடம் ஒப்பந்தம் செய்த அறிவுநம்பி மறுபக்கம் காலியாக வீடு உள்ளது என்று விளம்பரம் செய்து வாடகைக்கு வீடு தேடுபவர்களை குறிவைத்து பல லட்சம் பெற்றுக்கொண்டு வீட்டை லீசுக்கு விடுவதாக அவர்களிடமும் ஒப்பந்தம் போட்டுள்ளது தெரியவந்தது.
இருதரப்பினரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பாதிக்கப்பட்டவர்கள் நேற்று சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 200 பேர் குவிந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த தாம்பரம் கமிஷனர் ரவி அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையில் அனைவரும் புகார் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 350-க்கும் மேற்பட்ட நபர்கள் அறிவுநம்பியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவுநம்பி ரூ.12 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாகவும், இன்னும் பலர் அறிவுநம்பியால் ஏமாற்றப்பட்டிருப்பார்கள். அவர்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு அதிகரிக்கலாம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.