மாமல்லபுரத்தில் கடல் உள்வாங்கியபோது தென்பட்ட கோவில் கலசம், கல் தூண்களை ஆய்வு செய்ய தொல்லியல் துறையினர் முடிவு
மாமல்லபுரத்தில் கடல் உள்வாங்கியபோது தென்பட்ட கோவில் கலசம், கல்தூண்களை ஆய்வு செய்ய தொல்லியல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.;
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கடற்கரை கோவில் உள்ளிட்ட ஏராளமான புராதன சின்னங்கள் உள்ளன. இந்நிலையில், மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகில், கடல் உள்வாங்கி மணல் திட்டு ஏற்பட்டுள்ளது.
அங்கு பழங்கால கோவில்களின் டெரகோட்டா வகையை சேர்ந்த 70 செங்கற்கள், 8 தூண்கள், கோவில் உச்சியில் அமைக்கப்படும் கருங்கல் கலசங்கள் தென்பட்டன. மணல் திட்டாக காட்சி அளித்த அந்த பகுதி முழுவதும், இப்போது கோவில் கட்டுமானங்களை சேர்ந்த பழங்கால டெரகோட்டா வகையை சேர்ந்த சதுர வடிவு செங்கற்களாகவும் கருங்கற்களாவும் காட்சி அளிக்கிறது.
பல்லவ மன்னர்கள் மாமல்லபுரத்தை துறைமுகப்பட்டினமாகவும், காஞ்சீபுரத்தை தலைநகராகவும் கொண்டு ஆட்சி செய்தபோது மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, புலிக்குகை உள்ளிட்ட ஏராளமான கட்டுமான கோவில்களை வடிவமைத்தனர். குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோவாவில் இருந்து வந்த கடல் அகழாய்வு தொல்லியல் அறிஞர்கள் குழுவினர் மாமல்லபுரம் கடற்கரையில் படகில் சென்று ஆய்வு செய்து பல வரலாற்று தகவல்களை அப்போது வெளிக்கொண்டு வந்தனர்.
கடலில் பல கட்டுமானங்கள் (கோவில்கள்), பழங்கால கலை பொக்கிஷங்கள் மூழ்கி இருப்பதாகவும் அவர்கள் டெல்லியில் உள்ள மத்திய தொல்லியல் துறைக்கு அறிக்கை அனுப்பிவிட்டு சென்றனர். அதேநேரத்தில், தமிழக தொல்லியல் துறையின் அகழாராய்ச்சி பிரிவினர் 2005-ம் ஆண்டு புலிக்குகை புராதன சின்னம் அருகில் கடற்கரையை ஒட்டி அகழாய்வு செய்தபோது, பூமியில் புதைந்து கிடந்த பழங்கால முருகன் கோவில் கட்டுமானத்தை கண்டுபிடித்தனர்.
அங்கிருந்து பழங்கால கருங்கல்லில் வடிக்கப்பட்ட தூண்கள், வேல், குடுவைகள், கருங்கற்கள், கலசங்கள் போன்றவற்றை கண்டுபிடித்து எடுத்து அருங்காட்சியகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கடற்கரை கோவில் கட்டுமான பணி அமைத்தபோது அங்கு கடல் 1000 மீட்டர் தூரத்தில் பின்னோக்கி இருந்ததாகவும், அங்கு மக்கள் வாழ்விடங்கள் இருந்ததாகவும் கூறப்படுறது.
அப்போது, முதலாம் நரசிம்ம பல்லவ மன்னனால் சில சிறிய கோவில்கள் அங்கு கட்டப்பட்டதாகவும், காலப்போக்கில் கடலின் தட்ப வெப்ப நிலை மாறி கடல் முன்னோக்கி வந்துவிட்டதால் மக்கள் வாழ்விடங்கள், கோவில்கள் கடலில் மூழ்கி விட்டதாக வரலாற்று சான்றுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கடல் அரிப்பால் பூமிக்கடியில் இருந்து வெளிவந்துள்ள கல் தூண்கள், கலசங்கள், செங்கற்கள், சுண்ணாம்பு படிமங்கள் போன்றவை கடலில் மூழ்கி இடிந்த கோவில்களின் துகள்களாக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில், நேற்று மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரி இஸ்மாயில் தலைமையில் சென்ற தொல்லியல் துறை பணியாளர்கள், கடற்கரையில் பூமிக்கடியில் இருந்து வெளியே வந்துள்ள பழங்கால கோவில்களின் தூண்கள், ஸ்தூபிகள், சுண்ணாம்பு படிமங்கள், பழங்கால செங்கற்கள் போன்றவற்றை சங்க காலத்திற்கு முன்பு மண்ணில் புதையுண்ட இந்த கோவில் எந்த மாதிரியான கட்டுமான பணி, பல்லவர்களில் எந்த மன்னன் ஆட்சி காலத்தில் இவை புதையுண்டது என ஆய்வு செய்வதற்காக எடுத்து சென்றனர். கலசங்கள், தூண்கள் அதிக எடை கொண்டு இருந்ததால், கயிறுகட்டி தொல்லியல் துறை பணியாளர்கள் அதனை தூக்கி சென்றதை காண முடிந்தது.
கடல் உள்வாங்கியதால், பூமிக்கடியில் இருந்து வந்துள்ள கலை பொருட்களால் கடற்கரையில் பழங்கால கட்டுமான பொருட்களின் சிதறல்கள் அதிகமாக உள்ளதாலும், மணல் பரப்பும் கடல் நீரால் சூழப்பட்டுள்ளதால் அங்கு படகுகளை கரை நிறுத்தும் திட்டத்தை கைவிட்ட மாமல்லபுரம் மீனவர்கள் மாற்று இடத்தில் தங்கள் படகுகளை நிறுத்தி உள்ளனர். இந்நிலையில், பழங்கால கோவில் கட்டுமான பொருட்கள் வெளிவந்துள்ள இந்த இடத்தில், நிறுத்தியிருந்த தன்னுடைய படகை எடுக்க சென்ற மீனவர் விஜயகுமார் பாறையில் கிடந்த பழங்கால செப்பு நாணயம் ஒன்றை கண்டெடுத்துள்ளார்.
இது சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயமாக இருக்கலாம் என்றும் தொல்லியல் அறிஞர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.