தம்பதியை தாக்கிய லாரி டிரைவர்கள் 2 பேர் கைது
தம்பதியை தாக்கிய லாரி டிரைவர்கள் 2 பேர் கைது;
கோவை
கோவை ராமநாதபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 44). இவர் சொந்தமாக செப்டிங் டேங்க் சுத்தம் செய்யும் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இவரிடம் புலியகுளம் பாலசுப்ரமணியம் நகரை சேர்ந்த சூர்யா (23), சுண்டக்காமுத்தூர் ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்த குணா (29) ஆகியோர் டிரைவர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், சம்பளம் கொடுக்கும் பிரச்சினையில் திருமுருகனுக்கும், லாரி டிரைவர்களான சூர்யா, குணா ஆகியோருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் சூர்யா, குணா ஆகியோர் சம்பளம் வாங்குவதற்காக திருமுருகன் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டில் திருமுருகன் மற்றும் அவரது மனைவி மரகதமணி இருந்தனர். அவர்களிடம் சம்பளம் தொடர்பாக டிரைவர்கள் கேட்டபோது, நீங்கள் ஏற்கனவே வாங்கிய பணத்தை பிடித்தம் செய்துவிட்டு மீதி பணத்தை தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த சூர்யா, குணா ஆகிய இருவரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி மரகதமணி மற்றும் அவரது கணவர் திருமுருகனை தாக்கினர். தம்பதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் சூர்யா, குணா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.