கோவை
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ரங்கநாதபுரம் வீதியை சேர்ந்தவர் மங்கையர்கரசி. இவருடைய மகள் சங்கீதா (வயது 34). இவருக்கு சுரேஷ் என்பவருடன் திருமணமானது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சங்கீதா தனது கணவரை விட்டு பிரிந்து மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.
அப்போது சங்கீதாவின் தம்பி சரவணகுமார் (28) என்பவருக்கும் சங்கீதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மங்கையர்கரசி தனது மகளுக்கு ஆதரவாக பேசியதுடன் மகனை கண்டித்து உள்ளார். இதனால் சரவணகுமாருக்கு தனது அக்காள் மீது வெறுப்பு ஏற்பட்டது. அத்துடன் அவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி மங்கையர்கரசிக்கும், சரவணகுமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மங்கையர்கரசி தனது மகனை வீட்டைவிட்டு வெளியே செல்லும்படி கூறிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் வீட்டில் இருந்த சங்கீதாவுக்கும், சரவணகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த சரவணகுமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சங்கீதாவின் கழுத்தில் குத்தி அவரை கொலை செய்தார். தொடர்ந்து அங்கிருந்த ரத்தக்கரை மற்றும் தடயத்தை அழித்த அவர், தனது அக்காளின் உடலை ஒரு சூட்கேசில் மறைத்து வைத்து மோட்டார் சைக்கிளில் கோவை விமான நிலையத்தின் பின்புற பகுதிக்கு கொண்டு சென்றார். அங்கு யாரும் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இது குறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீசார் கொலை செய்தல், தடயத்தை அழித்தல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணகுமாரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட சரவணகுமாருக்கு கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000-மும், தடயத்தை அழித்த குற்றத்துக்கு 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீகுமார் தீர்ப்பளித்தார். அத்துடன் அவர் தடயத்தை அழித்த குற்றத்துக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனையை அனுபவித்த பிறகே ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.