முட்டைகோஸ் விளைச்சல் அமோகம் விலை கிடைக்காமல் விவசாயிகள் சோகம்

முட்டைகோஸ் விளைச்சல் அமோகம் விலை கிடைக்காமல் விவசாயிகள் சோகம்;

Update:2022-04-22 20:02 IST
முட்டைகோஸ் விளைச்சல் அமோகம் விலை கிடைக்காமல் விவசாயிகள் சோகம்
தொண்டாமுத்தூர்

கோவையில் முட்டைகோஸ் விளைச்சல்  அமோகமாக இருந்தும் விலை கிடைக்காமல் விவசாயிகள் சோகம் அடைந்துள்ளனர்.

முட்டைகோஸ் சாகுபடி

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், நரசீபுரம், தேவனாம்புதூர், போளுவாம்பட்டி, ஆலாந்துறை, செம்மேடு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்கான சீதோஷ்ண நிலை இந்த பகுதியில் நிலவுவதால் விவசாயிகள் ஆர்வத்துடன் இந்த பயிரை சாகுபடி செய்து வருகிறார்கள்.

தற்போது முட்டைகோஸ் அறுவடைக்கு தயாராகி உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் ஆர்வத்துடன் அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால் அதன் விலைதான் மிகவும் வீழ்ச்சியடைந்து விட்டது. முட்டைகோஸ் விளைச்சல்  அமோகமாக இருந்தும், விலை கிடைக்காமல் விவசாயிகள் சோகம் அடைந்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி மற்றும் விவசாயியான காளம்பாளையத்தை சேர்ந்த ஆர்.நாராயணசாமி ஆகியோர் கூறியதாவது:-

விலை வீழ்ச்சி

தொண்டாமுத்தூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் மட்டும் 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. ஜனவரி இறுதி மற்றும் பிப்ரவரி மாதத்தில் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடைக்கு தயாராகி பரவலாக அறுவடை நடந்து வருகிறது. ஆனால் அதன் விலைதான் மிகக்கடுமையாக வீழ்ச்சியடைந்து இருக்கிறது.
70 நாள் பயிரான முட்டைகோசை ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய 18 ஆயிரம் நாற்று தேவை. ஒரு நாற்றில் 16 இலை வந்து 17- வது இலை வரும்போதுதான் அது முட்டைகோசாக மாறும். ஒரு நாற்றில் இருந்து ஒரு முட்டைகோஸ்தான் கிடைக்கும். அதன் எடை 700 கிராம் முதல் ஒரு கிலோ வரை இருந்தால் நன்றாக இருக்கும்.

கிலோ ரூ.5-க்கு விற்பனை

மேலும் நாற்று, உரம், களைஎடுத்தல் என்று சாகுபடி முதல் அறுவடை வரை ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வரை செலவு ஆகும். நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 8 டன் வரை மகசூல் கிடைக்கும். கிலோ ரூ.15-க்கு விற்பனை செய்யும்பட்சத்தில் விவசாயிகளுக்கு ரூ.80 ஆயிரம் கிடைக்கும் என்பதால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்.

ஆனால் தற்போது அதன் விலை கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் தரமானதாக இருக்க வேண்டும். தரம் இல்லை என்றால் அதன் விலை அதைவிட குறைவு. இந்த விலைவீழ்ச்சிக்கு காரணம், சாகுபடி பரப்பளவு அதிகரித்ததுதான். உற்பத்தி அதிகமாக இருக்கிறது. ஆகவே விளைச்சல் அதிகம் இருந்தும் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் நஷ்டத்துக்குள் தள்ளப்பட்டு உள்ளனர்.

விலைநிர்ணயம்

முட்டைகோசை அறுவடை செய்து 10 நாட்கள் வரை இருப்பு வைக்கலாம். அதற்கு மேல் வைக்க முடியாது. எனவே முட்டைகோசுக்கு விலை நிர்ணயம் செய்து, மாலத்தீவு, இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால் முட்டைகோஸ் சாகுபடி இன்னும் அதிகரிக்கும், விவசாயிகளுக்கும் லாபம் கிடைக்கும். எனவே அதை செய்ய அரசுகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்