பட்டா வழங்கியும் அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கு குடியேற பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்
பட்டா வழங்கியும் அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கு குடியேற பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்;
பொள்ளாச்சி
பட்டா வழங்கியும் அடிப்படை வசதிகள் இல்லாததால் அங்கு குடியேற பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
அடிப்படை வசதி இல்லை
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் சிக்கராயபுரம் ஊராட்சி பூசநாயக்கன்தலையில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு பொள்ளாச்சி குமரன் நகர், சி.டி.சி. மேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டது.
அதன்பிறகும் அங்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட வில்லை.
எனவே பட்டா கொடுத்த இடத்தில் 6 பேர் மட்டும் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். ஆனால் அங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதனால் அந்த இடத்தில் வீடு கட்டி குடியேற பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
எனவே அங்கு அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது
பெண்கள் அச்சம்
சிக்கராயபுரம் ஊராட்சியில் பூசநாயக்கன்தலை என்ற இடத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு குமரன் நகர், சி.டி.சி. மேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 40 பேருக்கு பட்டா கொடுக்கப்பட்டது.
தற்போது 6 குடும்பத்தினர் மட்டும் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். பஸ், சாலை, குடிநீர், சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை.
அங்கு ஒரே ஒரு தெருவிளக்கு மட்டும் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் வசித்து வரு கின்றனர்.
அந்த பகுதி வழியாக காலையில் மட்டும் ஒரே ஒரு பஸ் செல்கிறது. பொள்ளாச்சிக்கு வருவதற்கு சி.கோபாலபுரம் பிரிவிற்கு சென்று தான் பஸ் ஏற வேண்டும்.
3 கிலோ மீட்டர் நடை
இதற்காக பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் தினமும் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டி உள்ளது.
அருகில் குடிநீர் தொட்டி இருந்தும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இல்லை. அந்த வழியாக செல்லும் குழாயில் தான் தண்ணீரை பிடித்து குடிக்க வேண்டிய நிலை உள்ளது.
அடிப்படை வசதிகள் இல்லாததால் பட்டா இருந்து குடியேற முடியாமல் இன்னும் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
எனவே வருவாய்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் ஆய்வு செய்து தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.