பொள்ளாச்சியில் கைதி தப்பி ஓடினார். அவரை சில மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்

பொள்ளாச்சியில் கைதி தப்பி ஓடினார். அவரை சில மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்;

Update:2022-04-22 21:30 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் கைதி தப்பி ஓடினார். அவரை சில மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

தொழிலாளி கைது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கருமாபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 60). கூலி தொழிலாளி. 

இவரது உறவினர் பெண் ஒருவருடன் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி மாணிக்கம் (35) என்பவர் தவறாக பழகியதாக தெரிகிறது.

 இதை பரமசிவம் தட்டி கேட்டார். இதனால் அவர்கள் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று பரமசிவத்திற்கும், மாணிக்கத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாணிக்கம், பரம சிவத்தை தகாத வார்த்தையால் பேசி தாக்கியதாக தெரிகிறது. 

இது குறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குபதிவு மாணிக்கத்தை கைது செய்தனர். 

தப்பி ஓட்டம்

பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு மதியம் 12 மணிக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு டாக்டரை பார்க்க போலீசார் சென்ற போது மாணிக்கம் திடீரென்று அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதை அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆஸ்பத்திரிக்கு வந்து போலீசாரிடம் விசாரணை நடத்தினார். 

பின்னர் ஆஸ்பத்திரியில் பொருத்தப் பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மடக்கி பிடித்தனர்

அதில் பஸ் நிலைய ரோட்டில் மாணிக்கம் ஓடும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் பாலக்காடு ரோடு பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மாலை 5 மணி அளவில் மாணிக்கத்தை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் சிறைக்கு செல்வதற்கு பயந்து மாணிக்கம் வீட்டிற்கு தப்பி ஓடியது தெரியவந்தது. 

இதையடுத்து பிடிபட்ட மாணிக்கத்துக்கு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 

தப்பி ஓடிய சில மணி நேரத்தில் கைதியை பிடித்த போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்