மலைப்பாதையில் உலா வந்த காட்டு யானை
மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதையில் காட்டு யானை உலா வந்தது.;
கோடைகாலம் தொடங்கி உள்ளதால் அடர்ந்த வனப்பகுதியில் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக உணவு மற்றும் நீர் நிலைகளை தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறி வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் காட்டு யானைகள் அடிக்கடி உலா வருகின்றன.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதையில் குஞ்சப்பனை அருகே காட்டு யானை உலா வந்தது. இதனைக்கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிறுது தூரத்துக்கு முன்னதாகவே வாகனங்களை நிறுத்தினர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காட்டுயானை, அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றதும் அந்த வழியே மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.