மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்
இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாதாந்திர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
ஆனைமலை
இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாதாந்திர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம்
ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மாதாந்திர கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
பின்னர் அவர் சிறப்பாக பணியாற்றிய தன்னாவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதற்கு வட்டார கல்வி அலுவலர் சின்னப்பராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தன்னார்வலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) ஜெயந்தி, இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரிய பயிற்றுனர் செல்வ சரோஜினி, வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் விஸ்வநாதன், கருப்பசாமி மற்றும் ஆசிரியர்கள் மணிகண்டன், செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-
தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை
பள்ளி, கல்வித்துறை மூலம் கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை, கற்றல் இடைவெளியை போக்குவதற்கு இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டு, தன்னாவலர்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் 410 தன்னார்வலர்கள் மூலம் 410 கல்வி மையங்களில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் நடைபெறுகிறது.
ஆய்வு கூட்டத்தில் இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானிய தொகையில் 25 சதவீதம் இல்லம் தேடி கல்வி மையங்களின் வளர்ச்சிக்கு செலவிட வேண்டும்.
பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பில் தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன் ஆய்வை அதற்கு என்று வழங்கப்பட்டு உள்ள செயலியில் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.