ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நவீன இதய இடையீட்டு சிகிச்சை மூலம் விவசாயியின் உயிரை காப்பாற்றிய டாக்டர்கள்

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில், நவீன இதய இடையீட்டு சிகிச்சை மூலம் விவசாயியின் உயிரை டாக்டர்கள் காப்பாற்றி உள்ளனர்.

Update: 2022-04-29 10:21 GMT
சென்னை,

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 73). விவசாயியான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து கஜேந்திரன் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் செய்த பரிசோதனையில் அவருக்கு மகா தமனியின் கீழ்ப்பகுதியில் கிழிசல் ஏற்பட்டு இதயத்துக்குள்ளேயே ரத்தம் கசியும் பாதிப்பு இருப்பதும், மேலும் அவருக்கு பிற முக்கிய உறுப்புகளும் சரியாக செயல்படாமல் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும் என டாக்டர் அறிவுறுத்தினர். இதையடுத்து கஜேந்திரன் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், இதய இடையீட்டு சிகிச்சை மூலம் அந்த ரத்த கசீவை நிறுத்த முடிவு செய்தனர். இந்த அறுவை சிகிச்சை குறித்து ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை ஒருங்கிணைப்பு அதிகாரி டாக்டர் அனந்தகுமார் கூறியதாவது:-

மகாதமனி கிழிசல் பாதிப்புக்கு ஆளான விவசாயி கஜேந்திரன், ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர். அவருடைய சிறுநீரகம், கல்லீரல்களின் செயல்பாடுகளும் பாதிப்புக்கப்பட்டு இருந்தது. அவரின் உடலில் ரத்த தட்டணுக்களின் அளவும் 40 ஆயிரத்துக்கும் கீழேயே இருந்தன. அவருக்கு வயது அதிகமாக இருந்ததும், உடல் உறுப்புக்கள் சரியாக செயல்படாமல் இருப்பதும் பெரிய சவாலாக இருந்தது.

இருந்தபோதிலும், சவாலை எதிர்கொண்டு சிகிச்சையை மேற்கொண்டோம். இதய இடையீட்டு சிகிச்சை முதுநிலை நிபுணர் டாக்டர் செசிலி மேரி மெஜல்லா தலைமையில் துறைத்தலைவர் டாக்டர் கார்த்திகேயன், டாக்டர்கள் மணிகண்டன், நவீன் ராஜா, மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர் டி.ஆர்.பார்த்தசாரதி, மகேஷ் உள்ளிட்ட குழுவினர், கஜேந்திரனின் தொடைப் பகுதியில் இரு சிறு துளையிட்டு இடையீட்டு சிகிச்சை மூலம் மகாதமனி பகுதியில் ‘ஏடிஓ' என்ற உபகரணம் பொருத்தப்பட்டு அதன் வாயிலாக ரத்தக்கசிவு நிறுத்தப்பட்டது.

இதுபோன்ற வயதான மற்றும் சிக்கலான நோயாளிக்கு இந்த வகை சிகிச்சை அளிப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை. இந்த சிகிச்சை தனியார் ஆஸ்பத்திரியில் செய்தால் ரூ.10 லட்சம் வரை செலவாகும். தற்போது அவருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கஜேந்திரன் நலமுடன் வேளாண் பணிகளுக்கு திரும்பியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்