ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் போலீசார் விசாரணை

ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் போலீசார் விசாரணை

Update: 2022-04-29 15:24 GMT
ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் போலீசார் விசாரணை
கோவை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணதாபா படுகாயம் அடைந்தார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்ற வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இந்த வழக்கில் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் இதுவரை 220-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த வாரம் சசிகலாவிடம் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் போலீசார் 2 நாட்கள் விசாரணை நடத்தினர். மேலும் கோவையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அவரது மகன், அவரது தம்பி மகன் உள்ளிட்டோரிடமும் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.


இந்த விசாரணையின் போது சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவிக்கின்றனர். இதனை போலீசார் வீடியோவாக பதிவு செய்வதாக தெரிகிறது. இதனிடையே கோடநாடு பங்களாவில் மர வேலைப்பாடுகள் செய்த அ.தி.மு.க. நிர்வாகி சஜிவன் மற்றும் அவரது அண்ணனிடம் தனிப்படையினர் 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த பூங்குன்றனிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதையடுத்து அவருக்கு தனிப்படையினர் சம்மன் அனுப்பினர்.இதனைத்தொடர்ந்து பூங்குன்றன் நேற்று காலை 11 மணி அளவில் கோவை பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளி மைதான அலுவலகத்திற்கு வந்தார்.

 அவரிடம் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது கோடநாடு பங்களாவில் எந்த மாதிரியான ஆவணங்கள் இருந்தன. ஜெயலலிதா பங்களாவில் இருந்த போது யார் யாரெல்லாம் அங்கு வந்தார்கள், அங்கு ஆவணங்களை பாதுகாக்க செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பினர். தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் பூங்குன்றனிடம் விசாரணை நடத்த தனிப்படையினர் திட்டமிட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்