ரேஷன் கடையில் இணையதள கோளாறு

பொள்ளாச்சி அருகே உள்ள ரேஷன் கடையில் இணையதள கோளாறு காரணமாக பொதுமக்கள் 3 மணி நேரம் காத்திருந்தனர்.

Update: 2022-04-29 16:56 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ரேஷன் கடையில் இணையதள கோளாறு காரணமாக பொதுமக்கள் 3 மணி நேரம் காத்திருந்தனர். 

ரேஷன் கடை

பொள்ளாச்சி அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் 243 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இந்த நிலையில்  இன்று வழக்கம்போல் காலை 10 மணிக்கு பொதுமக்கள் ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்கு சென்றனர். 

இதற்கிடையில் கடை ஊழியர் இணையதள கோளாறு காரணமாக சர்வர் பிரச்சினையாக உள்ளது. இதனால் பொருட்கள் வழங்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடைக்கு வெளியே பொருட்கள் வாங்குவதற்கு காத்திருந்தனர். 3 மணி நேரத்திற்கு மேலாகியும் பொருட்கள் வினியோகம் செய்யவில்லை. 

வாக்குவாதம்

இதனால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து கடை ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- 
கள்ளிபாளையத்தில் வாரத்தில் செவ்வாய், வெள்ளி ஆகிய 2 நாட்களில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சரியாக பொருட்கள் வினியோகம் செய்யாமல் அலைக்கழிக்கின்றனர். 

இதற்கிடையில் சர்வர் பிரச்சினையை காரணம் காட்டி வாரத்தில் கடை திறக்கப்படும் 2 நாட்களும் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்குவதில்லை. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொருட்கள் வாங்குவதற்கு முதியவர்கள், பெண்கள் காத்திருக்கின்றனர். ஆனால் சர்வர் பிரச்சினை பொருட்கள் வழங்க முடியாது என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர். 

சிக்கல்

இதுகுறித்து குடிமை பொருள் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. போராட்டம் நடத்த போவதாக கூறியதை தொடர்ந்து நோட்டில் எழுதி வைத்து பொருட்கள் வழங்குகின்றனர். இதை காலையிலேயே செய்து இருந்தால் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது. 

எனவே முறையாக பொருட்கள் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், கிராமங்களில் இணையதள கோளாறு காரணமாக சர்வர் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எங்களது செல்போனில் இருந்து இணையதளம் மூலம் இணைத்து பொருட்கள் வழங்கி வருகிறோம் என்றனர்.

மேலும் செய்திகள்