கிணத்துக்கடவு
கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் கிணத்துக்கடவில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலத்தின் மேல் பகுதியிலும், கீழ் பகுதியிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டது.
இந்தநிலையில் இன்று மதியம் முதல் மாலை வரை மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டு இருந்தது. இதை கண்டு பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில நாட்களாக பகலில் அடிக்கடி மின்சாரம் தடைபட்டு வந்தது. ஆனால் மேம்பாலத்தில் பகலிலும் மின் விளக்குகள் ஒளிருகிறது. இது மின்சாரத்தை வீணாக்கும் செயல் என்றனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டபோது, மேம்பாலத்தில் சில மின் விளக்குகள் சரிவர ஒளிராமல் இருந்ததால், அனைத்து மின் விளக்குகளையும் ஒளிரவிட்டு சோதனை செய்யப்பட்டது என்று விளக்கம் அளித்தனர்.