வாலிபரை கொல்ல சதி திட்டம் தீட்டிய வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாறுகிறது
வாலிபரை கொல்ல சதி திட்டம் தீட்டிய வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாறுகிறது;
கோவை
கோவை செல்வபுரத்தில் வசித்து வந்தவர் அருண்குமார் (வயது24). இவர் பி.எஸ்சி. தகவல் தொழில்நுட்பம் படித்துவிட்டு, கோவை கீரணத்தத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடைய தந்தை குமரேசன் நகைபட்டறை தொழிலாளி. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
அருண்குமார் திருவாரூரைச் சேர்ந்த சஹானா ஹாஷ்மி என்ற இளம்பெண்ணை காதலித்து கடந்த ஆண்டு செப்டம்பரில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அந்த பெண் இந்து மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஹானாவின் தாயார் நூர் நிஷா மிரட்டல் விடுப்பதால் அவரிடம் இருந்த பாதுகாப்பு கோரி காதல் தம்பதி செல்வபுரம் போலீசை அணுகினர். நூர் நிஷா ஒரு இயக்கத்தில் பதவி வகித்து வந்தார். தம்பதியரிடம் இருந்து மனுவை பெற்ற போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில், சஹானாவின் தாய் அருண்குமாரை அணுகி, முஸ்லி மாக மதம் மாறுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால், அருண்குமார் வேறு மதத்துக்கு மாறுவதற்கு அவரது தந்தை குமரேசன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அருண்குமார் மதம்மாற மறுத்து விட்டார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் அருண்குமாரை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியதாக தெரிகிறது. இதற்கு சதாம் உசேன், மற்றும் பக்ருதீன் ஆகியோர் நூர்நிஷாவுக்கு உதவியுள்ளனர்.
நூர் நிஷா குமரேசனின் புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலம் சதாம் உசேனிடம் பகிர்ந்துள்ளார். கொலையை நிறைவேற்றுவதற்கு முன்பு அந்த கும்பல் நோட்டமிட்டுள்ளது. ஆனால், கொலை சதி திட்டம் அரங்கேறும் முன்பு அந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராம்வீரிடம் இருந்து உரிமம் இல்லாத துப்பாக்கியை ரூ.40 ஆயிரத்துக்கு வாங்க கும்பல் திட்டமிட்டது. இந்த சதிதிட்டம் பற்றிய தகவல் அறிந்து நூர்நிஷா, திருச்சியை சேர்ந்த சதாம் உசேன், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம்வீர், சென்னை கொடுங்கையூரை சேர்ந்த பக்ருதீன், திருச்சி இம்ரான்கான், பெருந்து றையை சேர்ந்த முகமது அலி ஜின்னா ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீது சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் (உபா) வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில், கூட்டுசதி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளும் சேர்க்கப்பட்டது. இந்த வழக்கை சென்னை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றுமாறு கோவை நகர காவல் துறை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளது. உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது.