சோழிங்கநல்லூர் பகுதியில் புதிய திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
சோழிங்கநல்லூர் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய திட்டப்பணிகள் குறித்து சென்னை மேயர் பிரியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
சோழிங்கநல்லூர்,
பெருநகர சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மு.மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சென்னை மாநகராட்சி, சோழிங்கநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட வார்டுகள் 192 முதல் 200 வரை உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள், சாலைப்பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், பூங்கா பணிகள், நமக்கு நாமே திட்டப்பணிகள், தெருவிளக்கு பராமரிப்பு பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் மேயர் ஆர்.பிரியா பேசியதாவது:-
சோழிங்கநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட வார்டுகளின் உதவி மற்றும் இளநிலை என்ஜீனியர்கள் தங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாமன்ற உறுப்பினர்களும் தங்கள் பகுதிக்கு உட்பட்ட உதவி மற்றும் இளநிலைப் என்ஜினீயர்களுடன் ஒருங்கிணைந்து திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கள் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மண்டலக்குழு தலைவர் மூலம் எனக்கு தகவல் தெரிவித்தால், அதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு, அந்த கோரிக்கையை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மண்டலக்குழு தலைவர் வி.இ.மதியழகன், துணை கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், மாமன்ற தி.மு.க. தலைவர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.