பெண் டாக்டரிடம் நகை பறித்த 3 வாலிபர்கள் சிக்கினர்

காரமடை அருகே பெண் டாக்டரிடம் நகை பறித்த 3 வாலிபர்கள் சிக்கினர்.

Update: 2022-04-30 16:09 GMT
காரமடை

காரமடை அருகே பெண் டாக்டரிடம் நகை பறித்த 3 வாலிபர்கள் சிக்கினர்.

நகை பறிப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் ரத்த வங்கி பிரிவில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் ராம் தீபிகா(வயது 36). இவர் கடந்த 24-ந் தேதி மதிய வேளையில் பணி முடிந்து, காரமடை காந்தி நகரில் உள்ள தனது வீட்டுக்கு மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். 

அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென ராம் தீபிகா அணிந்திருந்த 14½ பவுன் தங்க நகைகளை பறித்துவிட்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

கைது

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை பறித்த 3 வாலிபர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், கோவை விளாங்குறிச்சியில் தங்கி உள்ள விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ரஞ்சித்குமார்(22), அஜித்குமார்(20) மற்றும் கோவை சித்ரா பகுதியை சேர்ந்த அபிஷேக் குமார்(23) ஆகியோர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் நகை பறிப்புக்கு பயன்படுத்திய விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் சரவணம்பட்டி, அன்னூர், கருமத்தம்பட்டி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்