கோவையில் தக்காளி விலை கிடு, கிடு உயர்வு

கோவையில் தக்காளி விலை கிடு, கிடுவென உயர்ந்து கிலோ ரூ.75 வரை விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.;

Update:2022-05-01 22:24 IST
கோவை

கோவையில் தக்காளி விலை கிடு, கிடுவென உயர்ந்து கிலோ ரூ.75 வரை விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

வரத்து குறைந்தது

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், நரசீபுரம், பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் 26 ஆயிரம் ஏக்கரில் தக்காளி பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் கோவையில் தக்காளி விளைச்சல் அதிகமாக காணப்பட்டது. 

இதன்காரணமாக தக்காளி கிலோ ரூ.5-க்கு விலை போனது. இதனால் நஷ்டம் அடைந்த விவசாயிகள் செடிகளில் இருந்து தக்காளியை பறிக்காமல் அப்படியே விட்டனர். சிலர் தக்காளி செடிகளை டிராக்டர் கொண்டு அழித்தனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைந்ததை தொடர்ந்து மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதையடுத்து கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து தக்காளி கோவைக்கு லாரிகளில் கொண்டு வரப்படுகிறது.

கிடு, கிடுவென விலை உயர்வு

தக்காளி வரத்து குறைந்ததை தொடர்ந்து அதன் விலை கிடு, கிடுவென உயர்ந்து உள்ளது. இதனால் கோவையில் சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.75 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை உயர்ந்த போதிலும், அதனால் தமிழக விவசாயிகளுக்கு பலன் இல்லை. காரணம் பெரும்பாலும் தக்காளி கர்நாடகா, மராட்டியத்தில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது.

இதுகுறித்து கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட் மொத்த வியாபாரி காதர் கூறியதாவது:-

கிலோ ரூ.75-க்கு விற்பனை

கோவை சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதை தொடர்ந்து எம்.ஜி.ஆர். மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்து விட்டது. முன்பு ஒரு நாளைக்கு 250 டன் முதல் 300 டன் வரை தக்காளி வரும். தற்போது 100 டன் முதல் 125 டன் வரை மட்டுமே தக்காளி வருகிறது.

 இந்த தக்காளியும் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
இதன்காரணமாக தக்காளி விலை கிடு, கிடுவென உயர்ந்து உள்ளது. மொத்த விற்பனை கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும், சில்லறை கடைகளில் ஒரு கிேலா ரூ.75 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வரும்போது சரக்கு வாகன வாடகை மற்றும் சுங்கசாவடி கட்டணம் உள்ளிட்டவற்றால் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. ரம்ஜான் பண்டிகை முடிந்ததும் தக்காளி விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.

இல்லத்தரசிகள் கவலை

தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர். விலை காரணமாக பலர் தக்காளி சட்டினி வைப்பதை பெண்கள் தவிர்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்