ரூ.2 லட்சம் நகை திருடியவர் கைது
கோவையில் ஜன்னல் கொசுவலையை கிழித்து ரூ.2 லட்சம் நகையை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.;
கோவை
கோவையில் ஜன்னல் கொசுவலையை கிழித்து ரூ.2 லட்சம் நகையை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகைப்பட்டறை உரிமையாளர்
கோவை செல்வபுரம் அசோக்நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 37). இவர் அந்தப்பகுதியில் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் தனது பட்டறையில் செய்த 44 கிராம் நகையை ஒரு காகிதத்தில் மடித்து அதை தனது பேன்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் ஜன்னல் ஓரத்தில் அந்த பேன்டை கழற்றி தொங்க விட்டார்.
பின்னர் மறுநாள் காலையில் பார்த்தபோது அந்த ஜன்னலில் போடப்பட்டு இருந்த கொசுவலை கிழிக்கப்பட்டு இருந்தது. அத்துடன் கணேசன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த 44 கிராம் நகையை காணவில்லை. இதனால் நகையை மர்ம ஆசாமி திருடிவிட்டு சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
கொசுவலையை கிழித்து திருட்டு
உடனே அவர் இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு நபர் அங்கு வந்து ஜன்னலில் போடப்பட்டு இருந்த கொசுவலையை கிழித்து அதன் வழியாக தனது கையை உள்ளே விட்டு நகையை திருடுவது பதிவாகி இருந்தது.
இதையடுத்து அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். அதில், அவர் கெம்பட்டி காலனியை சேர்ந்த மணிகண்டன் (31) என்பதும், அவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து தலைமறைவான மணிகண்டனை போலீசார் தேடி வந்தனர்.
வாலிபர் கைது
இந்த நிலையில், கெம்பட்டி காலனி அருகே பதுங்கி இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவர் மீது உள்ள வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.