காண்டூர் கால்வாயில் சீரமைப்பு பணிகள் நிறைவு
பொள்ளாச்சி அருகே காண்டூர் கால்வாயில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றது. இதைதொடர்ந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது.;
பொள்ளாச்சி,
காண்டூர் கால்வாய்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை உள்ளது. இந்த அணைக்கு பரம்பிக்குளத்தில் இருந்து சர்க்கார்பதி மின் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, அங்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
மின் உற்பத்திக்கு பின் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த அணை மூலம் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் 4 மண்டலங்களாக பிரித்து ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் பாசனத்திற்கு பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இன்று தண்ணீர் திறப்பு
இதற்கிடையில் காண்டூல் கால்வாயில் 9-வது கிலோ மீட்டர் தூரத்தில் பனப்பள்ளம் என்ற இடத்தில் கசிவு ஏற்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் செயற்பொறியாளர் நரேந்திரன், உதவி செயற்பொறியாளர் லீலாவதி, உதவி பொறியாளர்கள் செந்தில், பிரகாஷ் ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது கால்வாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் ஓடை வழியாக செல்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து காண்டூர் கால்வாயில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. மேலும் கசிவு சீரமைப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், காண்டூர் கால்வாயில் 9-வது கிலோ மீட்டர் தூரத்தில் கசிவு ஏற்பட்டதால் தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. தற்போது பணிகள் நிறைவடைந்து, மீண்டும் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்றனர்.