ஆழியாறில் போலீசார் தீவிர கண்காணிப்பு
அணை, தடுப்பணையில் குளிப்பதை தடுக்க ஆழியாறில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.;
பொள்ளாச்சி
அணை, தடுப்பணையில் குளிப்பதை தடுக்க ஆழியாறில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மற்றும் பூங்காவை சுற்றி பார்க்க கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆழியாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணை, தடுப்பணைகளில் அத்துமீறி குளிக்கின்றனர்.
இதனால் சுற்றுலா பயணிகள் சேறு, சுழலில் சிக்கி இறக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி விடுமுறை விடப்பட்டதால் ஆழியாறுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தனர்.
இதையொட்டி அணை, தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுக்க ஆழியாறு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் குளிக்க வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
தொடர்ந்து கண்காணிக்கப்படுமா?
ஆழியாறு அணை, தடுப்பணையில் இறங்கி குளிப்பது ஆபத்தானது. ஆனால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு அணை, தடுப்பணையில் குளிப்பதால் ஏற்படும் விபரீதம் தெரிவதில்லை. இதனால் குளிப்பதற்கு இறங்கி உயிரை விடும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. இதை போலீசாரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
ஏதாவது உயிரிழப்புகள் ஏற்பட்டால் மட்டும் விடுமுறை நாட்களில் கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.
மற்ற நாட்களில் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் குளிக்கின்றனர். எனவே போலீசாரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இணைந்து அணை, தடுப்பணைகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுப்பதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அப்போது உயிரிழப்புகளை தடுக்க முடியும்.
சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பர பலகைகள் வைக்க வேண்டும். தொடர்ந்து கண்காணித்து அத்துமீறும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.