பொதுமக்களிடம் பெற்ற 300 மனுக்கள் மீது நடவடிக்கை
வால்பாறையில் நடந்த முகாமில் பொதுமக்களிடம் பெற்ற 300 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.;
வால்பாறை
வால்பாறையில் வருகிற 21-ந் தேதி கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக வால்பாறை தாலுகா அலுவலகத்தில் மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.
முகாமுக்கு பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரேசுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
அந்த மனுக்கள் மீது துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
குறிப்பாக ஊசிமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் ஆதார் அட்டை எடுக்க உதவ வேண்டும் என மனு கொடுத்தார். உடனடியாக ஆதார் அட்டை எடுக்கும் மைய பணியாளரை அழைத்து ஆதார் அட்டை எடுத்து கொடுக்க சப்-கலெக்டர் உத்தரவிட்டார்.
முகாமில் மொத்தம் 300 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிற 21-ந் தேதி கோவை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் மனுநீதி நாள் முகாமில் தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முகாமில் நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார், தாசில்தார் (பொறுப்பு) ஜெகதீசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.