ஆன்லைன் செயலி மூலம் ரூ.72 ஆயிரத்துக்கு நகை வாங்கிய 2 பேருக்கு வலைவீச்சு
கோவையில் லிப்ட் கேட்பதுபோல நடித்து வாலிபரின் செல்போனை பறித்து, ஆன்லைன் செயலியை பயன்படுத்தி ரூ.72 ஆயிரத்துக்கு தங்க நகை வாங்கிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
கோவை
கோவையில் லிப்ட் கேட்பதுபோல நடித்து வாலிபரின் செல்போனை பறித்து, ஆன்லைன் செயலியை பயன்படுத்தி ரூ.72 ஆயிரத்துக்கு தங்க நகை வாங்கிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தனியார் நிறுவன ஊழியர்
கோவை கணபதி மணியக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் ஷியாம்குமார் (வயது 25), தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக வீட்டில் இருந்து மொபட்டில் சென்றார்.
ஷியாம்குமார் எப்.சி.ஐ ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்டார். இதையடுத்து அவரை ஷியாம்குமார் மொபட்டில் ஏற்றி சென்று தண்ணீர்பந்தல் ரோடு லட்சுமி நகரில் இறக்கி விட்டுள்ளார்.
அப்போது, அங்கு ஏற்கனவே காத்திருந்த வேறு ஒரு நபரும், லிப்ட் கேட்டு வந்த நபரும் சேர்ந்து ஷியாம்குமாரை மிரட்டி அவரது செல்போன் மற்றும் மொபட்டை பறித்தனர்.
ரூ.72 ஆயிரம் எடுத்ததாக குறுஞ்செய்தி
பின்னர் அந்த மர்ம நபர்கள் வாலிபரின் செல்போனில் பாஸ்வேடு மற்றும் ஆன்லைன் பணபரிவர்த்தனை செயலியின் ரகசிய எண்ணையும் மிரட்டி பெற்றனர். இதையடுத்து ஒருநபர் மொபட் மற்றும் செல்போனுடன் அங்கிருந்து சென்றார். மற்றொருவர் ஷியாம்குமாரை மிரட்டி தன்னுடன் அங்கேயே நிற்க வைத்தார்.
சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த நபர் திரும்பி வந்தார். பின்னர் அவர்கள் 2 பேரும் ஷியாம்குமாரை அழைத்துக்கொண்டு பவர்ஹவுசில் இறக்கிவிட்டுவிட்டு, அவரிடம் செல்போன் மற்றும் மொபட்டை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த ஷியாம்குமார் தனது செல்போனை சோதனை செய்தார். அப்போது, தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.72,500 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்திருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.
தங்க நகை வாங்கினர்
இந்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், போனை பறித்துக்கொண்டு மொபட்டில் சென்ற நபர், ஹோப் காலேஜ் அருகே உள்ள நகைக்கடைக்கு சென்று ஷியாம்குமாரின் ஆன்லைன் பணபரிவர்த்தனை செயலியின் மூலமாக ரூ.72,500-க்கு தங்க நகை வாங்கியது தெரியவந்தது.
நூதன முறையில் பணம் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நகைக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வாலிபரின் உருவப்படத்தை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.