கிராம மக்கள் சாலை மறியல்

வடவேற்குடியில் புதிய பாலம் கட்டித்தர வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-05-05 19:00 GMT
கூத்தாநல்லூர்:-

வடவேற்குடியில் புதிய பாலம் கட்டித்தர வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

புதிய பாலம் கட்ட கோரிக்கை

கூத்தாநல்லூர் அருகே வடவேற்குடியில், வெண்ணாற்றின் குறுக்கே பழுதடைந்த, குறுகலான சிமெண்டு பாலம் உள்ளது. இந்த பாலத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக அகலமான சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய பாலம் கட்டித்தர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் நேற்று வடவேற்குடி கிராம மக்கள், பழுதடைந்த பாலத்தையொட்டிய சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காலதாமதம் செய்யாமல் அகலமான புதிய சிமெண்டு பாலம் கட்டித்தர வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதா, வடபாதிமங்கலம் வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், மணக்கரை கிராம நிர்வாக அலுவலர் ஜெயராம் மற்றும் வடபாதிமங்கலம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் சேந்தங்குடி-கூத்தாநல்லூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்